சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 30 (இறுதி பாகம்)


எப்படியோ அவளை தூக்கி கொண்டு விரைவாக வந்து டாக்ஸி பிடித்து மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார். ஒரு பக்கம் தாதி குழந்தையை சுத்தப்படுத்த இன்னொரு பக்கம் செந்தூராவை பரிசோதிக்கும் முன் மருத்துவர் ஏன் இவ்வளவு தாமதமாக கொண்டு வந்தீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு நீரனை ஒரு வழி பண்ணி விட்டார்.

அவனும் சாமி கும்பிட வந்த இடத்தில் இப்படி நேர்ந்து விட்டது என கூறி அவசரத்தில் அவர்களே பிரசவம் பார்க்கும் போது ஆகிவிட்டது என ஒரு வழியாக பேசி அந்த மருத்துவரை சமாதானப்படுத்துவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது.என்ன ஒரு ஆச்சர்யம்.. செந்தூரா சுகப்பிரசவம் நடந்தது போல மிகவும் ஆரோக்கியமாக இருந்தாள்.அவளது பிறப்புறுப்பிலிருந்த காயங்கள் கூட முற்றாக ஆறி இருந்தது.உண்மையில் அவள் குழந்தையைப் பெற்றவள் தானா என்று மருத்துவருக்கு ஒரு சந்தேகம் வந்தது..அந்த அளவிற்கு குழந்தையை அவள் தான் சுமந்து பெற்றால் என்ற எந்த தடயமும் செந்தூரா உடலில் இல்லை.

அளவுக்கு அதிகமான இரத்தபோக்கும் வயிற்றில் அவளுக்கு இருந்த வயிறு விரிவடைந்த வெள்ளை கோடுகளும் மார்பில் வந்து கொண்டிருந்த பாலையும் பார்க்கும்போது சற்று நம்பிக்கை வந்தது.. அது இப்பொழுது தான் வளர்ந்து வரும் கிளினிக் என்பதால் அவ்வளவாக எந்த கெடுபிடியும் இல்லாமல் செந்தூராவிற்கு ட்ரிப்ஸ் ஏற்றி படுக்க வைத்திருந்தனர். அவளின் பக்கத்தில் பிறந்த சில மணி நேரங்களே ஆன அழகிய குழந்தை. மருத்துவர் நீரனிடம் உண்மையிலேயே இந்தப் பெண்தான் இந்த குழந்தையை பெற்றாளா என வினவினார். சற்று முன்னர்தான் அவள் குழந்தை பெற்றால் என்று கூறுகிறாய் ஆனால் அப்படி எந்த ஒரு தளும்பும் காயமும் அவளது பிறப் புறுப்பில் இல்லையே என்று அவர் கேள்வி எழுப்ப நீரனும் குழம்பி போனான். எப்படியோ கெஞ்சி கூத்தாடி அவள் தான் குழந்தையைப் பெற்றாள் என்று கூறியவுடன் மருத்துவரும் அதோடு விட்டு விட்டார்.அங்கிருந்த அனைவருக்குமே இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எப்படி ஒரு சிறு காயம் கூட இல்லாமல் அவளின் பிறப்புறுப்பில் இருந்த காயங்கள் மறைந்திருக்கும்.. மற்றவர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள சிவலோகன் இதற்கான விடையை கண்டுபிடித்தார்.

“அய்யா நீரா உன் பொண்டாட்டி புள்ள பெத்தது என்ன சாதாரண குளத்துலயா. அது அந்த ராஜா ஜீவசமாதி அடைஞ்ச இடம்.. அவரோட ஆத்ம சக்தி அந்த இடத்துல தான் சுத்திட்டு இருக்கும்..உன் கண்ணால பாத்தல்ல அந்த கல் செல மண் செல மாறி தண்ணில கரைஞ்சு போனத.. உண்மையான அன்புக்கு இந்த இயற்கை கண்டிப்பா ஒதவி பண்ணும்..”

“எப்டியோப்பா நீங்க ரெண்டு பேரும் இல்லனா நாங்க இல்ல.. உசுரு இருக்குற வரைக்கும் உங்கள மறக்க மாட்டோம்..”நீரன் சிவலோகன் காலில் விழ அவனை அணைத்து ஆறுதல் படுத்தினார் பெரியவர். கணியை அணைத்து நன்றி கூற

“ப்ரோ இதெல்லாம் சப்ப மேட்டரு.. போயி உங்க பொண்டாட்டியயும் புள்ளயயும் பாருங்க”.. என்றான்.

ஆரம்பம் முதல் இன்றுவரை தனது அனைத்து பிரச்சனைகளையும் தன்னுடைய பிரச்சனையாக உணர்ந்து தோழனுக்கு தோழனாக தோள் கொடுத்து,உடன் பிறந்த சகோதரனுக்கு இணையாக பிரச்சனைகளை பகிர்ந்து,தனக்கு சம்பந்தமே இல்லாத போதும் நண்பனை இந்த சாபத்தில் இருந்து நீக்குவதற்காக தன்னுடைய வம்சத்தையும் இதில் பணயம் வைத்து உயிருக்கு போராடும் வேளையிலும் தன்னை விட்டுச் செல்லாமல் எல்லா நேரத்திலும் தன்னுடைய நிழலாக நின்றவன் ராசு. அவனைக் காணும் போது நன்றி சொல்ல வாய் எடுத்தான் நீரன். தேவர் மகன் ரேவதி போல காற்றுதான் வந்தது. வார்த்தைக்கு பதிலாக அவனின் தொண்டை அடைத்துக் கொண்டது. கண்களில் கண்ணீர் விடாமல் வழிந்தது.மச்சான் என்ற வார்த்தை மட்டுமே இருவர் வாயிலிருந்தும் வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள அங்கே வார்த்தைகளற்று அவர்களின் நட்பே ஓங்கி ஒலித்தது..

ராசு குகனுக்கு அழைத்து செந்தூரா குழந்தை பெற்ற விவரத்தை சொல்ல குகனும் தில்லையும் அடித்த பிடித்த கிளம்பிவிட்டனர்.ஆனால் உடனே விமானம் கிடைக்காமல் மறுநாள் மட்டுமே அவர்களுக்கு டிக்கெட் கிடைத்தது.குகன் ரொம்பவே கேட்டுக்கொண்டதால் நீரன் குழந்தையின் புகைப்படத்தை கைபேசியில் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தான்.தில்லைக்கு தனது பேரனை கண்டதும் இருப்புக் கொள்ளவில்லை. உடனே அவனை பார்க்க பரபரக்க அவர்கள் அவசரத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லையே.. செந்தூரா அறையில் தனித்திருக்க அவளை காண உள்ளே வந்தான் நீரன்.. மருத்துவர் கூறியது உண்மைதான்.

புதிதாக பூத்த ரோஜா பூ போல மலர்ந்திருந்தாள் செந்தூரா.அவளைக் காணும் யாவரும் அவள் சற்று முன்புதான் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள் என சத்தியம் செய்தால் கூட நம்பமாட்டார்கள்.அவளின் அருகே அவர்களின் குழந்தை. எந்த குழந்தை பிறந்தால் செந்தூரா உயிர் பிரிந்து விடும் என நீரன் பயந்தானோ அந்த குழந்தை.முதலில் தனது மனைவியை பார்த்தான். மயக்கம் தெளிந்த நிலையில் அவனை பார்த்து அழகாக புன்னகைத்தாள் செந்தூரா.. அவளது இதழில் அழுத்தமாக இதழ் பதிக்க இருவருக்குமே அப்படி ஒரு மனநிறைவு.பின்னே இருக்காதா எவ்வளவு பெரிய கண்டத்தைத் தாண்டி வந்துள்ளனர்.உயிர் போய் உயிர் வந்தது என்று சொன்னால் சரியாக இருக்கும்.. இருவருமே பேசாத வார்த்தைகளை அந்த ஒரு இதழ் முத்தம் ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசி ஓய்ந்தது. தாய் தகப்பனின் பாராமுகம் கண்டு குழந்தை சினுங்கியது. நீரன் தன்னுடைய குழந்தையை பார்த்தான்.என்னை கருவில் கலைக்க சொன்னாய் அல்லவா என்பதை போல முதல் பார்வையிலேயே அவனை முறைத்து பார்த்தது.

“செர்ரி பாத்தியாடி.. உன்ன மாறியே என்ன மொறைக்குறான்.. படுவா ராஸ்கோல் ஆர பாத்து கண்ணாம் முழிய உருட்டுற..நா உன்ற அப்பன்டா..என்ற கிட்டயே உன்ற மொறைப்ப காட்டுறியோ”நீரன் குழந்தையைக் கையில் ஏந்திக் போலியாக மிரட்ட குழந்தையும் இன்னும் அதிகமாக சிணுங்க ஆரம்பித்தது. அதைப் பார்த்த செந்தூரா

“நீரா எரும ஏன் குழந்தைய மெரட்டிட்டு இருக்க.. என்ற மவன மெரடுற ஜோலியெல்லாம் வெச்சிக்காத.. தெரியும்ல என்னிய பத்தி..இழுத்து வெச்சு அறுத்து புடுவேன்”

“எதே”

“நாக்க..அவன ஆருன்னு நெனைக்குற..இந்த செந்தூராவோட மவனாக்கும்.. பெருசாயி பாரு எப்டி அப்பனுக்கும் மேல வாரான்னு”

“ஆத்தி பொறந்து அர நாளு கூட ஆவுல அதுக்குள்ள ஆத்தாக்காரியா வசியம் பண்ணிபுட்டானே..ஆனா செர்ரி இதுல இவன் அப்டியே என்னிய மாறி.. நா எப்டி உன்ற கிட்ட கெரங்கி கெடக்கேனோ அப்டித்தான் நம்ம மவனும் உன்ற அன்புக்கு மயங்கி கெடப்பான்..ஆனா குட்டி பய்யா உனக்கு மூனு வயசான அப்பா வேற ரூமுக்கு தொரத்தி விட்ருவேன்.. அம்மா கூட தான் படுப்பேன்னு அடம் பண்ண கூடாது. அப்பதான் உனக்கு தங்கச்சி பாப்பா ரெடி பண்ண முடியும்..தங்கச்சி பாப்பாக்கும் அதே தான். மூனு வயசுல வேற ரூமு.. காலத்துக்கும் என்ற பொண்டாட்டி பக்கத்துல நான் மட்டும் தான் படுப்பேன்”

“ஐயோ நீரா பையன் கிட்ட போயி என்னத்த பேசிகிட்டு இருக்க மாடு..”வெட்கத்தில் சிவந்து போனாள் செந்தூரா. அவளுக்கு பிரசவம் பார்த்தவன் தனது ஆடையை கூட மாற்றவில்லை.அவளது ரத்தம் அவனது ஆடையில் அப்படியே தெரிந்தது. கலைத்து முகமும் பரட்டைத் தலையுமாக அவனை பார்த்தவளுக்கு கர்வமாக இருந்தது.இவன் என்னவன் என்று.அதன்பிறகு ராசு கணி சிவலோகன் மூவரும் வந்து குழந்தையை பார்த்து கொஞ்சி மகிழ்ந்தனர்.கிளினிக் பக்கத்திலேயே இருந்த தங்கும் விடுதியில் கணி அறை ஏற்பாடு செய்திருக்க மற்றவர்கள் அங்கேயே தங்கிக் கொண்டனர்.நீரன் மட்டும் மருத்துவரிடம் கேட்டு தனது மனைவியுடன் தங்கிக் கொண்டான்.

அதிக இரத்தப் போக்கு என்பதால் ஒரு இரண்டு நாட்கள் மட்டுமே கிளினிகில் இருந்தால் போதும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.மறுநாள் கிடைத்த ஃபிளைட்டில் ஏறி குகன் தில்லை இருவரும் மகாராஷ்டிரா வந்து சேர்ந்தனர்.தில்லை பேரனை பார்த்தாரோ இல்லையோ முதலில் அவர் பார்த்தது அவருடைய அன்பு மகளை.. அவள் நலமோடு இருப்பதை கண்டு அவர் நிம்மதி பெருமூச்செறிந்தார்.அதன் பிறகு குழந்தையை தூக்கி கொஞ்சினார். குழந்தை அப்படியே செந்தூராவின் ஜாடை. தன்னுடைய மகளை மீண்டும் குழந்தையாக கைகளில் ஏந்திய உணர்வு அவருக்கு. கண் கலங்கி விட்டார் தில்லை.மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து ஒரு வாரம் ஓய்வில் இருந்த செந்தூரா விமானத்தில் பயணம் செய்யலாம் என்று கூறியவுடன் இவர்கள் கூட்டமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தது. கணியும் சிவலோகனும் அப்படியே தங்கள் ஊருக்கு சென்றுவிட இவர்கள் நால்வரும் குழந்தையுடன் இவர்கள் ஊருக்கு வந்தனர். தன்னுடைய வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிய நீரனிடம் தில்லை கெஞ்சி கூத்தாடி அவருடைய வீட்டிற்கு கூட்டி வந்தார். கண்ணம்மாவிற்கு ஒரே சந்தோஷம்.

செந்தூராவை வளர்த்தவர் அல்லவா அவர்.அவளின் குழந்தையை தூக்கி வைத்து ஒரே கொஞ்சல்.ஊரே திரண்டு வந்தது இவர்களின் குழந்தையை பார்க்க தில்லை வீடு புதிய வரவினால் கொண்டாட்டமாக இருந்தது. ஒரு நாள் செந்தூரா பகலில் உறங்கி விட்டிருந்த சமயம் தில்லை நீரனை அழைத்தார். அவரது அறைக்கு அழைத்துச் சென்றவர்

“நா உன்… உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் மாப்ள”நீரன் அவர் தடுமாற்றத்தை கண்டு சிரித்துக் கொண்டான்

” சொல்லுங்க மாமா”

“இல்ல என்ற மவள கடத்திட்டு போனீங்களே அன்னிக்கு செவுத்துல நீங்க எழுதிருந்த விஷயம்.. உங்களுக்கு எப்டி”

“அதெல்லாம் எதுக்கு மாமா.. அதான் எல்லாம் சரியாயிருச்சே..”

“இல்ல மாப்ள தயவு செஞ்சு சொல்லுங்க”.. நீரன் சொல்ல தொடங்கினான்.

செந்தாமரை நீரன் தாயின் தங்கை.அவனின் சித்தி.நீரனின் அம்மா கர்ப்பம் தரித்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பிறக்கும்போதே பித்த உடம்பு அவருக்கு. இதில் மசக்கையும் சேர்ந்து கொள்ள பாவம் ரொம்பவே துவண்டு போனார். பக்கத்து ஊரில் தான் அவரது குடும்பம் இருந்தது. அப்பாவும் அம்மாவும் வயதான காலத்தில் அலைய முடியாது அல்லவா..அதனால் செந்தாமரை அவ்வப்போது தனது சகோதரியை வந்து பார்த்துவிட்டு அவருக்கு ஏதாவது உதவி தேவையென்றால் செய்து கொடுத்துவிட்டு செல்வார். இப்படி தான் ஒருநாள் தன்னுடைய அக்கா வீட்டிற்கு வந்தவர் மாலையாகி வீடு திரும்ப வேண்டியதாகியது. ஜெமினி முக்கியமான விஷயமாக டவுன் வரை சென்று இருக்க தனியாக தன் ஊருக்கு செல்ல வேண்டிய நிலைமை.அவரை தன்னுடன் தங்கிக் கொள்ளுமாறு நீரனின் அம்மா எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்.

ஆனால் செந்தாமரைக்கு நாளை முக்கியமான பரீட்சை உள்ளதால் இன்றே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பொழுது சாயும் வேளை கிளம்பிவிட்டார்.தில்லையின் தோப்பை தாண்டி சென்றால் விரைவாக ஊர் எல்லைக்கு சென்று விடலாம்.. அவரும் தில்லையின் தென்னந்தோப்பை தாண்டி சென்று கொண்டிருக்க அப்பொழுது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.தில்லையின் உடன்பிறந்த சகோதரன் பாண்டியன்..சரியான குடிக்காரன் ஊதாரி..பட்டை சாராயத்தை குடம் குடமாக குடித்துவிட்டு மோட்டார் அறையின் முன்னே கைத்து கட்டிலை போட்டு படுத்திருந்தவன் கண்களில் விழுந்தார் செந்தாமரை. போதை தலைக்கு ஏறி சுற்றும் முற்றும் பார்த்த பாண்டியன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு செந்தாமரையை வாயை பொத்தி தூக்கிக் கொண்டு மோட்டார் அறைக்குள் சென்றான்.

அங்கே செந்தாமரையின் கற்பு பாண்டியனின் கைகளில் பறிபோனது.. எல்லாம் முடிந்து அவன் சென்றுவிட இப்படியே இருந்தால் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயத்தில் தட்டுத்தடுமாறி எழுந்த செந்தாமரை மீண்டும் தனது அக்கா வீட்டிற்கே சென்றார். இரவு தனது வீட்டில் இருப்பாள் என்று எண்ணிக்கொண்டிருந்த தங்கை அலங்கோலமாக தன் வீட்டிற்கு வரவும் பயந்து போனார் நீரனின் அம்மா. என்ன ஏதென்று தங்கையிடம் விசாரிக்க அனைத்தையும் அக்காவிடம் கொட்டி விட்டு கதறி அழுதார் செந்தாமரை. இரண்டு பெண்களும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். ஜெமினியிடம் கூறிவிடலாம் என்று நீரனின் அம்மா கூற அதனை மறுத்தார் செந்தாமரை. விஷயம் இப்படி என்று வீட்டிற்கு தெரிந்தால் ஊருக்கு பயந்து செந்தாமரை படிப்பை நிறுத்தி அவரை ஏதாவது ஒரு இழிச்சவாயனுக்கோ அல்ல இரண்டாம் தாரமாக ஜெமினிக்கோ கட்டி கொடுக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது.ஒரு வெறிநாய் தன்னை கடித்ததால் தன்னுடைய கனவு அழிவதை செந்தாமரை விரும்பவில்லை.

தன் அக்காவிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். தண்ணீரை மொண்டு தலையோடு ஊற்றிக் கொண்டார். இப்படி ஒரு விஷயம் நடந்தது யாருக்கும் தெரிய கூடாது என்று அக்கா தங்கை இருவருமே முடிவு செய்தனர். தன் வீட்டிற்கு அழைத்து நேரமாகிவிட்டதால் அக்கா வீட்டிலேயே தங்கி கொள்வதாக செந்தாமரை கூறிவிட்டார். மறுநாள் எதுவும் நடக்காததுபோல செந்தாமரை தன் ஊருக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு பரீட்சை கிட்ட நெருங்கியதை காரணம் காட்டி அக்கா வீட்டிற்கு வருவதை தவிர்த்தார்.இறுதியாக நீரன் பிறந்த அன்றைய தினம் வந்தவர் தன் அக்காவின் மரணம் கண்டு கதறி அழுதார். உறவுகள் அனைவரும் குழந்தைக்காக செந்தாமரையை ஜெமினிக்கு இரண்டாம் தாரமாகக் கட்டி வைக்க ஒருமனதாக முடிவு செய்தனர்..

செந்தாமரை மறுத்து பார்த்தார்.அடி மிதி கிடைத்தது.ஜெமினிக்கும் இதில் உடன்பாடில்லை. இறுதியாக செந்தாமரை ஜெமினியிடம் உதவி கேட்க அவரும் யாருக்கும் தெரியாமல் செந்தாமரையை சென்னையில் இருக்கும் தனது நண்பர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.அங்கே சென்ற செந்தாமரை தனது படிப்பைத் தொடர்ந்து நல்ல வேலையில் அமர்ந்தார்.ஆனாலும் தனது உறவுகளுக்கு பயந்து மறைந்து மறைந்து வாழ்ந்தார்.பின்பு அவர் வேலை பார்த்த அலுவலகத்தில் வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததும் ஒரேடியாக அங்கேயே சென்று விட்டார்.. அங்கே தன்னை விரும்பிய ஒருவரை பார்த்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக செட்டிலாகிவிட்டார்.

ஜெமினியின் மரணத்தின்போது சென்னையில் இருந்த நண்பரின் மூலம் அதனை கேள்விப்பட்டு நீரனுக்கு அழைத்து தான் யார் என்பதை கூறி ஆறுதல் கூறினார். அவர் சொல்லியதை கேட்டதும் நீரனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனாலும் தன்னை தானே தேற்றிக் கொண்டான். ஏனென்றால் அந்த பாண்டியன் இப்போது உயிரோடு இல்லை. அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்து குடல் வெந்து அல்பாயுசில் இறந்துவிட்டான். அன்று தன் தம்பி செந்தாமரை என்ற அப்பாவி பெண்ணிற்கு செய்த துரோகம் தில்லைக்கு தெரியவந்தது.தனது கவுரவத்துக்கு பயந்து அதனை அப்படியே மூடி மறைத்துவிட்டார்.பெண் பாவம் பொல்லாதது என்பதை பாவம் அவர் அறியவில்லை.இதை தான் நீரன் சுவரில் போஸ்டர் ஒட்டி சொல்லிருக்க எங்கே இந்த விஷயம் தனது மகளுக்கு தெரிந்தால் நீ எல்லாம் ஒரு மனிதனா என்று காறி உமிழ்ந்து விடுவாள் என்ற பயத்தால் தில்லை வாய் மூடி இருந்தார்..

நீரன் அனைத்தையும் சொல்லி முடிக்க”மாப்ள என்ற உடன் பொறந்த ஈத்தர நாயி இப்டி அறியா பொண்ண கெடுக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்.. அவன் கெடுத்த அன்னிக்கே எனக்கு விஷயம் தெரியும்.. ஆனா என்னால வெளிய சொல்ல முடியல.அந்த நாயி செத்து தொலஞ்சிருச்சு.. உன்ற சித்திக்கு செஞ்ச அநியாயதுக்கு தான் என்ற பொண்டாட்டி என்ன விட்டு போய்ட்டா போல.. மாப்ள ஒம்ம கால கூட புடிச்சு கேக்குறேன் தயவு செஞ்சு இந்த விஷயத்த என்ற மவ கிட்ட சொல்லிராதப்பூ.. ஒரு பொண்ணுக்கு நியாயம் சொல்ல வக்கு இல்லாத நீயெல்லாம் ஒரு மனுசனானு என்ற முகத்தில் காறி துப்பிட்டு போய்டுவா..நீரா”அவர் குரல் தழுதழுத்தது.அவரின் கைகளை பிடித்து கொண்டவன்

“மாமா ஒம்ம மெரட்டி காரியம் சாதிச்சிட்டேன் அதுக்கு என்னிய மன்னிச்சிருங்க.. இந்த உண்ம நம்ம குள்ளயே செத்து போவட்டும்..என்ற சித்தியும் நல்லாவே இருக்காங்க அதனால ஒரு குடிக்காரனுக்கு நியாயம்னு பேரு சொல்லி அவங்கள அவனுக்கு கட்டி வெச்சிராம கவுரவம்னு பேரு சொல்லி மூடி மறச்சிட்டிங்க..ரொம்ப நன்றி மாமா”தில்லை நன்றியோட நீரனை பார்த்து சிரித்து கொண்டார்.

செந்தூராவின் நேரங்கள் எல்லாம் குழந்தையுடன் இன்பமாக சென்றது. அவள் வாழவே முடியாதென நினைத்து பயந்த வாழ்க்கை. கணவன் குழந்தை என குடும்பாக மகிழ்ந்து களிக்கும் வாழ்க்கை.தன்னுடைய குழந்தையை எந்நேரமும் தூக்கியே வைத்திருந்தாள். கை சுகம் கண்டு விடும் என கண்ணம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்ப்பவளா அவள்..பிரச்சனை யாவும் முடிந்த நிம்மதி ஒருபுறமும் கண்ணம்மாவின் கவனிப்பில் ஒரே மாதத்தில் பழைய நிலைக்கு வந்தாள் செந்தூரா. சில பெண்கள் குழந்தை பெற்ற பின்பு மிகவும் அழகாக மாறி விடுவார்கள். அவர்களின் முக அமைப்பும் உடலின் தகதகப்பும் இதற்கு முன்பு இவர்கள் இவ்வளவு அழகாக இருப்பார்களா என்பது சந்தேகமே என்று எண்ணும் அளவிற்கு அவர்களின் முகம் அவ்வளவு லட்சணமாக இருக்கும்.செந்தூராவின் முகமும் இப்பொழுது அப்படித்தான் இருந்தது.. இதற்கு முன்பும் அவள் அழகி தான். ஆனால் இப்பொழுது பேரழகி. அவளை பார்க்கும் போதெல்லாம் அள்ளி தனது உயிரின் கூட்டில் பொத்தி வைக்க வேட்கை எழுந்தது நீரனுக்கு.. முப்பது நாள் தீட்டு என கூறி அவனை தள்ளியே வைத்து சித்ரவதை செய்து கொண்டிருந்தாள் செந்தூரா..

அன்று காலையில் குளித்துவிட்டு புது மலராக சேலை கட்டி வெளியே வந்தவளை பின்னிலிருந்து அள்ளி அணைத்தான் நீரன்..

“ஓய் என்ன ஜமீனு காலையிலேயே கட்டி புடி வைத்தியம் பண்றிங்க”

“எனக்கு மேலுக்கு சொகமில்ல அம்மணி..அதான் உங்கள கட்டி புடிச்சு எனக்கு எனர்ஜி ஏத்திக்குறேன்”என்றவன் அவள் கழுத்தில் இதழ் பதித்து அப்படியே ஈர முதுகிற்கு உதட்டால் ஒத்தடம் கொடுக்க சிலிர்த்து போனாள் செந்தூரா.. அவள் கால்கள் வழுவிழந்து எக்கி நீரனின் பின்னந்தலையை ஒரு கையால் பிடித்து கொண்டாள்.நீரனுக்கு இது வசதியாக போய் விட்டது.அவளின் வெற்று இடையில் கை கொடுத்து அழுத்தி பிடித்து சிவக்க வைத்தான்.

அவன் பிடித்த பிடியே கூறியது அவனின் நிலையை..”ஜமீனு சரியான காட்டான்யா நீனு.. இடுப்ப ஒடச்சிருவ போல.. மெதுவா நீரா”

“காதலுல என்னடி மெதுவா வேகமான்னு..என்ற பொண்டாட்டி செந்தூரா காதல் எப்பவும் அதிரடி தான்.. அவ அளவுக்கு இல்லனாலும் ஏதோ என்னால முடிஞ்சது”இதுவரை இறுக்கி பிடித்திருந்த இடையை மென்மையாக வருடி கொடுத்தான். அவனின் கடுமையை தாங்கி கொண்டவளுக்கு இந்த மென்மையை தாங்க முடியாமல் துவள தொடங்கினாள்.

அவளை அப்படியே அலேக்காக தூக்கியவன் படுக்கையில் கிடத்தி அவள் மேல் சரிந்து அவளின் பிறை முகத்தை பார்த்து கொண்டிருந்தான். இந்த முகத்தை அவன் சிறுவனாக இருக்கும் பொழுதிலிருந்து பார்த்து கொண்டிருக்கிறான்.அப்போது எல்லாம் சண்டைகள் மட்டுமே இருவரின் இடையே இருந்தது. சண்டைகள் இரு வேறு துருவங்களை இணைக்குமா.. இணைத்திருக்கிறதே. அவளின் அடாவடிக்கும் அவனின் அதிரடிக்கும் இங்கு அழகான காதலல்லவா வேரூன்றி நிற்கிறது. எத்தனை தடங்கள்.

அவர்களை அவர்களே புரிந்து கொள்ளாத தருணங்கள்.. மனம் நிறைய காதல் இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நேசித்தவளையே காயப்படுத்திய நிமிடங்கள்.. தனது பிறவி குணத்தால் மனம் கொண்டவனை தன் கையாலே சுட்டு உதிரம் பார்த்த கணங்கள்.. ஊர் மெச்ச செய்து கொள்ளவேண்டிய கல்யாணத்தை கடத்திச் சென்று கட்டாயப்படுத்திய நினைவுகள். பழி வாங்குகிறேன் பேர்வழி என்று அவன் மேல் இன்னும் இன்னும் நேசத்தை வளர்த்துக்கொண்ட வினாடிகள். இருவருக்குமே தனித்தனியாக பிரச்சனை இருக்கும் பொழுது இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஒருவர் இன்னொருவரின் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டு வெளியே கொண்டு வர எடுத்துக்கொண்ட அக்கறைகள்.. இறுதியாக உயிர் போகும் சமயத்திலும் இருவருமே தங்களது துணைக்கு உறுதுணையாக நின்ற கணங்கள்.. எல்லாமே அவர்கள் இருவரின் அளவே இல்லாது நேசத்தினால் உண்டானவை.

தன் கணவன் தன்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட செந்தூரா

“என்ன நீரா அப்டி பாக்குற”

“என்ற பொண்டாட்டி டி.. எப்டி வேணும்னாலும் பாப்பேன்..நீ எனக்கு கெடச்ச தேவத செர்ரி.. உன்ற உசுரயே பணயம் வெச்சு நம்ம வம்சத்த காப்பாத்திட்ட.. இப்டியே உன்ன கட்டி புடிச்சிட்டு நீ அடிக்குற அடிய தாங்கிட்டு உன்ற வெறித்தனமா அன்புல சந்தோசமா வாழ்ந்து முடிச்சிரனும்”

“முடிக்க எல்லாம் கூடாது.. வாழனும் நீரா..இவங்க மாறி ஜோடி யாருமே இருக்க மாட்டாங்கனு சொல்ற அளவு வாழனும்”என்றவள் அவனை இழுத்து அவனது இதழ்களில் இதழ் பதிக்க அவர்களின் நெருக்கம் பொறுக்காமல் அழுதான் அவர்களின் மைந்தன்.. ஒட்டிக்கொண்ட இருவரும் சட்டென்று பிரிந்தார்கள்..நீரனின் ஏக்கம் கண்டு கேலி புன்னகை புரிந்த செந்தூரா மகனை தூக்கி சமாதானப்படுத்த ஆரம்பித்தாள். போலியான கோபத்துடன் தனது புதல்வனை முறைத்துக் கொண்டிருந்தான் நீரன்.

குழந்தைக்கு பெயர் சூட்டும் விசேஷத்தை பெரிய அளவில் செய்திருந்தார் தில்லை நாயகம். விசேஷத்திற்கு கணி சிவலோகம் இருவரும் வந்திருக்க அந்த ஊரே திரண்டு வந்திருந்தது.. குழந்தைக்கு அம்ருதன் என பெயர் சூட்டினர் நீரன் செந்தூரா தம்பதியினர்.

“என்னப்பா சீமதொற நீரன் பைய வால புடிச்சிகிட்டு சுத்திட்டு தெரிஞ்சான் உன்ற மவன். நீரனுக்கே கண்ணாலம் ஆயி பொண்டாட்டி புள்ளன்னு ஆச்சு.. உன்ற மவனுக்கும் ஏழு கழுத வயசாகுதுல இப்டியே இருந்தா எப்படிப்பு ஒருத்திய புடிச்சு கட்டி வைக்க வேண்டிதானே”கூட்டத்தில் கறி சோறு உண்டு விட்டு பல்லு குத்தி கொண்டிருந்த பெருசு ஒன்று கொளுத்தி போட ராசு கண்களில் கனவோடு சீமதுரையை பார்க்க

“ஆருய்யா நீரு.. இவன் கெட்ட கேட்டுக்கு கண்ணாலம் ஒன்னு தான் கொறச்சலாக்கும்.ஆளும் மண்டயும் சட்டயும் பாரு கிறுக்குப் பய.. எனக்குன்னு வந்து பொறந்துருக்கு பாரு தறுதல..”

“ஆமா ஆமா இவரு ஜில்லா கலக்டரு கழட்டிட்டாறு..நாம தான் உருப்படாம நாசமா போய்டோம்.எம்மா பேசாம இந்தாள அத்து விடுமா.. உனக்கு டேட்டிங் அப்ல ஒரு நல்லா பையனா பாத்து கட்டி வைக்குறேன்.. என்ற அம்மா இருந்த அழகுக்கு அமெரிக்காவுல இருந்து பொண்ணு கேட்டாங்க ஆஸ்திரேலியாவுல இருந்து பொண்ணு கேட்டாங்க இம்புட்டு ஏன் கழுத ஆபிரிக்காவுல இருந்து கூட பொண்ணு கேட்டாங்க அவுங்க கெரகம் ஒழுங்கா வேட்டி கட்ட கூட தெரியாத சீமதொற தலையில விடிஞ்சிருச்சு”

“ஏலே எடுபட்ட பக்கி இன்னைக்கு ஒன்ன பொலி போட்டுட்டு தான்டா மறு வேல”என்று சீமதுரை ராசுவை துரத்த அந்த இடமே கலகலப்பானது..

ஆறு மாதங்களுக்கு பிறகு..

கெட்டி மேளம் ஒலிக்க நாதஸ்வரம் முழங்க ராசு அவனின் அத்தை மகளான அன்னக்கிளி கழுத்தில் தாலி கட்டினான்.. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம்.. சிறியவர்கள் இருவருக்கும் இதில் விருப்பமே.. நண்பனின் திருமணத்தில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான் நீரன்..பந்தி பார்த்து கொண்டிருந்தவனை யாரோ ராசு அழைப்பதாக கூற அங்கே சென்றான்.

“மச்சான் எங்கடா போயி தொலைஞ்ச.. எல்லோரும் போட்டோ எடுத்துட்டு இருகாங்கடா.. வா நாமளும் ஒரு குரூப் போட்டோவ போடுவோம்..”என்றான் ராசு. மணமக்கள் நடுவில் நிற்க நீரன் செந்தூரா அருகில் தான் நிற்பேன் என்று அடம்பிடித்து தன் குழந்தையை தூக்கியபடி நிற்க தில்லை குகன் சீமதுரை அவரின் மனைவி கணி சிவலோகன் என அனைவரும் வரிசையாக நிற்க போட்டோகிராஃபர் ரெடி என்று சொல்ல செந்தூரா பெயருக்கு ஏற்றார்போல் செந்தூர நிற சேலை கட்டிக் கொண்டிருக்க அவளை பார்த்தவன்

“அம்மணி என்ன ஆள தூக்கி அடிக்குறிங்க..மாமனால கண்ட்ரோலே பண்ண முடியல.. இதுக்குத்தான் வூட்டுலயே இருக்கலாம்னு சொன்னேன் கேட்டியா”

“ம்க்கும் பொது எடத்துல என்ன விவஸ்த்த இல்லாம பேச்சு வேண்டி கெடக்கு.பூரா சனமும் நம்மள தா பாக்குது அங்குட்டு பாருய்யா”

“மச்சான் இன்னைக்கு கல்யாணம் எனக்குடா..நீ என்னமோ ரொமான்டிக் படம் ஓட்டி ஹீரோ ஆயிடாத..உன்கூட சுத்துன பாவதுக்கு இன்னைக்கு ஒரு நாளைக்கு எனக்கு அந்த போஸ்ட்ட விட்டு கொடுடா..”

“பொழச்சு போ நாயே”என்று நீரன் சொல்ல ராசு தனது கலகலப்பு சூர்யா சிரிப்பை அன்னக்கிளியை பார்த்து சிரிக்க பொண்ணு மிரண்டு நெஞ்சை பிடிக்க சுற்றி நின்ற உறவுகள் கொல்லென்று சிரிக்க அதை அழகாக புகைப்படம் ஆக்கியிருந்தார் போட்டோகிராபர்..

கேமராவில் புகைப்படத்தை பார்த்தால் அதில் இத்தனை கலவரம் நடந்தாலும் யார் எப்படி போனால் என்ன என்று நீரன் தன் காதல் மனைவியை கண்களால் களவாடி கொண்டிருக்க அவனுக்கு சற்றும் சலைக்காமல் ஒற்றை புருவம் ஏற்றி இறக்கி செந்தூரா அவனை முறைக்க இவர்களை கண்டு அம்ருதன் பொக்கை வாய் மலர்ந்து சிரிக்க புகைப்படத்திலும் இவர்கள் அதிரடி மாறவில்லை..

என்னதான் இருவரும் முரட்டுத்தனமாக தங்களுடைய காதலை காட்டி இருந்தாலும் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்பது அவர்களுக்குள் எழுதப்படாத நியதி..

சொக்க வைக்கும்

கலையில் சிறந்தவளா

நீ?

சொக்கிதான் போகிறேன்

நானும்..

உனது அளவு கடந்த

அன்பான ஆதிக்கத்தில்

எனது செல்ல

செந்தூரமே!

முற்றும்…

Comments

  1. Amazing 😍😍😍😍😍😍

    ReplyDelete
  2. சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  3. Awesome story. Beautiful ending. Love makes everything perfect and well..
    Lovely story. Different journer.. 💞i love this.. Write more stories like this. 💓💓

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்