சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 6

தனதறையில் கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் செந்தூரா. மல்லிகைப்பூ கண்கள் இரண்டும் செந்நிறமாக இருந்தாலும் கன்னத்தில் கண்ணீரின் கோடுகள் இல்லை. கண்களை சிமிட்டாமல் அவள் படுத்திருக்கும் தோரணையை கண்டால் கண்ணீரை வெளிவர விடாமல் வேலியிட்டு காக்கிறாள் போல. இரவாகியும் உண்ணாமல் இருப்பவளை அறைக்கு சென்று அழைக்க கண்ணம்மாவுக்கு கால்கள் நடுங்கியது.குகனிடம் சென்றவர்

“அய்யா”

“என்ன கண்ணம்மா.. ஏன் நடுங்கி போயி நிக்குற”

“ராவாச்சு.. இன்னும் யாருமே சாப்புட வரல.பெரியய்யாவ கூப்டேன். சோறு ஒண்ணுதான் கேடு இப்பன்னு கத்திட்டு படுத்துடாரு. அம்மணி அறைக்கு போகவே எனக்கு வெடவெடன்னு வருது. நீங்களும் இன்னும் சாப்பாடல..”

“சாப்புடற மாறியா கண்ணம்மா இருக்கு நம்மூட்டு நெலம? எவ்ளோ ஆசையா பொழுது விடிஞ்சதுல இருந்து காத்து கெடந்தோம். எல்லாமே ஒரு நிமிசத்துல நாசமா போச்சே. என் அக்கா உசுர வுடும்போது என் கைய புடிச்சு சொல்லுச்சு. குகா மாமாவுக்கு யாரும் இல்லடா. எந்த நெலம வந்தாலும் மாமாவ விட்டுட்டு போய்டாத. அவரோட நிழலா கூடவே இருன்னு.என் மகளும் புருஷனும் உன் பொறுப்புன்னு சொல்லிட்டு கண்ண மூட்டிட்டா மவராசி.அக்காவுக்கு கொடுத்த வாக்க காவந்து பண்ண முடியல. மாமா மனசு ஒடஞ்சு ஊரு சனம் முன்னாடி அசிங்கப்பட்டு போய்டாரு.அம்மணி எப்டி அவள சீரட்டி வளத்தோம். அவ மண்டையில அவளே மண்ணள்ளி போட்டு புட்டாளே பாவி மக”கண்ணம்மாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. செந்தூராவின் செயலில் அவருக்கும் உள்ளூர வருத்தம் தான். என்ன இருந்தாலும் சிறு வயதில் இருந்து தூக்கி வளர்த்தவர் அல்லவா. அவள் சாப்பிடாமல் இருக்கவும் இவருக்கு பெறாத வயிறு பற்றி எரிந்தது.

“அய்யா என்னங் நீங்க பொசுகுன்னு கண்ணுல தண்ணி வெச்சிக்கிட்டு. நீங்களே இப்டி ஒக்காந்தா பெரியவருக்கு ஆரு ஆறுதல் சொல்றது? அம்மணி செஞ்சது தப்பு தான். என்ன பண்றது நம்ம புள்ளைக்கு கெரகம் சரியில்ல. அதான் இப்டி போட்டு ஆட்டுது. அதும் கண்டுச்சா என்ன இப்டி ஆவும்னு. ஆனது ஆயி போச்சு எல்லாத்தயும் சாமி கிட்ட வுட்டு போட்டு அவங்கள சரிகட்டுங்கய்யா”

“கண்ணம்மா நீ சாப்பாடு எடுத்து வையு போ” பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர் முதலில் சென்றது மருமகளின் அறைக்கு. கதவை திறந்தவர் அறையே கும்மிருட்டில் இருக்க முதலில் விளக்கை தட்டிவிட்டு கட்டிலை நெருங்கினார். விளக்கு வெளிச்சத்தில் கண்கள் கூசினாலும் கண்களை மூடாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் செந்தூரா.

“அம்மணி”அவளிடம் அசைவில்லை.

“கண்ணு செந்தூரா” என்றவர் குனிந்து அவள் தலையை தடவி விட அவள் கண்களில் இருந்து குபுக்கென்று கண்ணீர் வெளியேறியது. திரும்பி அவரை பார்த்தவள் அவரது கையை பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டு கதறி அழுது விட்டாள். கட்டிலில் அமர்ந்தவர் அவள் அழுது முடிக்கும் வரை அவள் தலை முடியை கோதி கொடுத்து கொண்டு இருந்தார். அழுகையினூடே

“மாமா நா சத்தியமா அப்டி பண்ணனும்னு பண்ணல. தெரியாம கை பட்ருச்சு.அவன் வேற ரொம்ப பேசவும் என்னமோ அவன் மேல தப்பே இல்லாத மாறி”

“தப்பா அவன் என்ன கண்ணு தப்பு செஞ்சான்” தான் உளறி விட்டதை உணர்ந்தவள்”ஆஹ் ரொம்ப திமிரா என் முன்னாடி நின்னு பேசுறான்ல அது தப்பு இல்லியோ”

” அவன் என்ன நமக்கு அடிம பத்திரமா எழுதி கொடுத்துருக்கான் கண்ணு?அவன் திமிரா எங்கம்மா பேசுனான்? நியாயமா தானே பேசுனான்?”

“அப்போ நா தா தப்பு பண்ணிட்டேனே”

“நீ கோச்சிக்கிட்டாளும் அதான் தாயி நெசம். ஒத்த பொட்டப்புள்ளய வளக்க தெரியாம வளத்து வெச்சிருக்கான் பாருன்னு ஊரே உங்கப்பார காறி துப்புது..நீ ஏன் இப்டி செஞ்சன்னு புரில கண்ணு ஆனா என்ற அம்மணி இப்டி செய்ய ஏதாச்சும் காரணம் இருக்கும்.. நீ அழாதடா செல்லம். வா வந்து சாப்புடு வா”

“வேணா மாமா எனக்கு பசிக்கல”

“உன்ற அப்பாரும் இன்னும் சாப்புடல”

“நீங்க”

“ம்க்கும் நீங்க ரெண்டு பேரும் பட்னியா கெடகையில எனக்கு சோறு தண்ணி எறங்குமா கண்ணு”அவர் அவ்வாறு கூறியதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள் செந்தூரா.ஓடிப் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தவவள் மாமனை இழுத்துக் கொண்டு தனது தந்தையின் அறைக்குச் சென்றாள்.தில்லையின் அறையில் விளக்கு எரிந்தது.சுவரில் தொங்கிய மனைவியின் புகைப்படத்தில் பார்வையை பதித்தபடி அமர்ந்திருந்தவரை காண்கையில் மனம் வலித்தது மகளுக்கு.

“டேடி”அவர் பேச வில்லை.மீண்டும்”டேடி”என்றாள். அவர் கண்களை மூடிக்கொண்டர். மூடிய கண்களில் திரையாக ஓடியது ஊராரின் ஏச்சும் பேச்சும்.

“ஆத்தாடி ஆத்தே குருவி குஞ்ச சுடுற கணக்கா சுட்டு புட்டாளே பொசுக்குன்னு..இவ பொண்ணா இல்ல பிடாரியா”

“ஒத்த பொட்டப்புள்ளய கண்டிச்சு வளக்க துப்பில்ல.. இவன்லாம் ஒரு அப்பன். மீசைய மட்டும் காது வர வளத்துகிட்டா போதுமா. புள்ளைக்கு நல்லது கெட்டது அடக்க ஒடுக்கம் சொல்லி கொடுக்க வக்கிள்ள எப்டி புள்ளய மாடு மாறி வளத்து விட்ருக்கான் துப்புக்கெட்டவன்”

“இந்த பீட பொறந்துதான் பெத்தவள முழுங்கிருச்சு..சீராட்டி பாராட்டி மார்ல போட்டு வளத்த அப்பனுக்கும் இதால தல குனிவு..பொண்ணா இவலாம்.. நீரன் பயல சுட்டு புட்டாளே.. தங்கமான பையன் அவன். அவன சுட்ட கையில கட்ட மொலைக்க..அந்த கையி வெளங்காம போவ.. எப்டி திமிரா பாக்குறா பாரு கட்டையில போறவ”யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வருமாம். அதுப்போல பூனையாக பாம்மிக்கொண்டிருந்த ஊர்காரர்கள் உறவினர்கள் அனைவரும் இந்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வாய்க்கு வந்தபடி தில்லை குடும்பத்தை கிழி கிழி என்று கிழித்து கொண்டிருந்தார்கள்.

குகன் தான் தன் குடும்பத்தை அவதூறாக பேசிய அவர்களை கையில் அரிவாளுடன் முன் பேச அழைக்க கூட்டத்தில் சலசலப்பு அடங்கி மயான அமைதி உருவானது. முணுமுணுத்துக் கொண்டே கூட்டம் கலைந்து சென்றது.அருமை பெருமையாக வளர்த்து மகள் ஊர் வாயில் அரைப்படுவதை எந்த தகப்பனால் தாங்கிக்கொள்ள முடியும்?செந்தூரவை பற்றி நன்கறிந்த அவரால் மகளின் இந்த செயலை நியாயப் படுத்த முடியவில்லை. நீரன் மேல் என்னதான் தனிப்பட்ட கோபம் இருந்தாலும் அதை ஊரைக்கூட்டி சபையில் வைத்து தீர்த்துக் கொண்டால் ஆகுமா.. இப்பொழுது அவமானம் அசிங்கம் யாருக்கு? அதோடு இல்லாமல் கையில் தோலைச் சிராய்த்துச் சென்ற குண்டு சற்றுத் தள்ளி நான்கு இன்சில் அவன் நெஞ்சில் பாய்ந்திருந்தால் மகள் அல்லவா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பாள்..கற்பனையில் அந்த காட்சியை நினைத்து பார்த்தவருக்கு உடல் குலுங்கி அதிர்ந்தது. தந்தையின் அருகே வந்து அவர் காலடியில் அமர்ந்து செந்தூரா

“டேடி என்ன மன்னிச்சிருங்க. என்னால தான் உங்களுக்கு இந்த அவமானம். அவங்களாம் சொன்ன மாதிரி இல்ல டேடி.நீங்கதான் உலகத்தோட பெஸ்ட் அப்பா. என்ன ரொம்பவே நல்லா வளத்திங்க.ஆனா நான் தான் முட்டா தனமா நடந்துகிட்டேன்..என்ன மன்னிச்சிடுங்க டேடி”அவர் மடியில் தலைவைத்துக் கண்ணீர் விட்டவளை அதற்கு மேலும் கோபித்துக் கொள்ள முடியாமல் தலையை வருடிக் கொடுத்தார் தில்லை.

“என்றா கண்ணு நீயு இதுக்கு போயி கண்ண கசக்கிகிட்டு.நீ அழுதா அய்யனுக்கு தாங்குமா? என்ற உசுருடா நீயு. ஏதோ கோபம் சட்டுனு அந்த பையன சுட்டு போட்ட. அதான் அவன் உசுருக்கு ஒன்னும் ஆகலல்லோ..பொறவு என்ன தாயி.எல்லாத்தையும் நா பாத்துக்குறேன். ஊரே அசந்து போற மாறி உன்ற கண்ணாலத்த அய்யன் நடத்தி காட்டுறேன் கண்ணு.. நீ வெசன படாத தங்கம்.. நீ அழுதா என்னால தாங்கிக்க முடியாதும்மா”மகன் மேல் குற்றம் என்றாலும் அவள் மேல் அளவில்லாமல் பாசம் வைத்த தந்தையால் அவள் அழுவதை தாங்கிக்கொள்ள முடியுமா?தந்தையின் அன்பில் மேலும் மேலும் அழுந்தால் செந்தூரா.

ஒருவழியாக அழுது முடித்து தந்தையையும் மாமனையும் அழைத்துக்கொண்டு உணவு மேஜைக்கு வந்தாள்.கண்ணம்மா மூவருக்கும் உணவு பரிமாற அதிகமான பேச்சுவார்த்தைகளற்று இரவு உணவு முடிந்தது. உணவு கல்லாக இறங்கியது அவளுக்கு. தந்தை முகத்திற்காக பல்லை கடித்துக்கொண்டு உண்டு முடித்தாள்.இரவு பல்கனியில் நின்று வான் நிலவை பார்த்து கொண்டிருந்தவள் பகலில் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தாள்.அவள் சுட்டதும் நீரன் தோலை கிழித்துக் கொண்டு பாய்ந்த தோட்டா அதிக ரத்தப் போக்கையும் உண்டாக்கியிருந்தது. ராசு தான் அதிகம் பதறினான். ஆனால் நீரன் மூச்சை இழுத்து தன்னை சமன் செய்து கொண்டான்.அவனும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஊர்க்காரர்களுக்கு செந்தூராவின் இதழ்கள் புன்னகை சிந்தியது மட்டுமே கண்களுக்கு தெரிந்தது.அவள் கண்களில் இருந்த வலி அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.அந்த வலியை அவன் கண்டுகொண்டான். உயிர் போகும் வலி அவள் கண்களில்.அந்த வலி தனக்கான வலி என்பதை புரிந்து கொண்டவன் தான் தன்னுடைய வலியை முகத்தில் காட்டினால் அவள் மேலும் கலவரம் அடைவாள் என்பதால் தனது வலியை பற்களை கடித்து தாங்கிக் கொண்டான்.

தில்லை மகளின் செயலால் அதிர்ச்சி அடைந்து அவளை அறைந்திருந்தார். இன்னொரு அறை அவளை அறைய முற்பட அடிபடாத மற்றொரு கையினால் அவர் கரத்தைப் பற்றித் தடுத்தவன்

“வேணாமுங்க..ஆச ஆசயா பொண்ண வளத்தது இப்டி அறைய தானா.. எதுக்காக அவங்கள அடிக்குறிங்க. வேணுமுன்னே சுட்டுருக்க மாட்டாங்க கை தவறி நடந்துருக்கும்.குண்டு கையில கூட படல. தோல தான் சிராச்சிட்டு போயிருக்கு.மஞ்ச பத்து போட்டா பட்டு மாறி காஞ்சு போயிரும். இதுக்கு போயி இவ்ளோ டென்ஷன் ஆயிட்டு விடுங்க கவுண்டரே..”வாய் தில்லையிடம் பேசினாலும் கண்கள் செந்தூராவை விட்டு அகலவில்லை. பேசிக்கொண்டிருந்த நண்பனை கடுமையாக முறைத்த ராசு நீரனின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். செல்லும் போது கூட அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டுச் சென்றானா.. நடந்தவைகளை எண்ணி பெருமூச்சு விட்டவள் தான் ஏன் அப்படி செய்தோம் என யோசித்துப் பார்த்தாள்.சிறு வயதிலிருந்தே தனக்கு ஒருவர் என்ன செய்தார்களோ அதை அவர்களுக்கு திருப்பி செய்வது அவளின் குணமாகும்.அந்த குணம் தான் தன்னை புறக்கணித்த நீரனை நடு சபையில் வைத்து அவமானப்படுத்த ஏதுவாக இருந்தது.

தன்னை அவமானப்படுத்தி அழவைத்தவனை காயப்படுத்தி வேதனைப்படுத்த தூண்டியது. அவன் மேல் அவள் மனதில் இன்னும் காதல் இருந்தது. அதையும் தாண்டி அவளின் பிறவி குணம் அவளை இம்மாதிரி செய்யவைத்தது.இதற்கு யாரை குற்றம் சொல்வது?நீரன் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு வீட்டில் ஓய்வெடுக்கிறான் என்னும் செய்தி கண்ணம்மாவின் வாய் மூலமாக தெரிந்து வைத்திருந்தாள். அன்றொருநாள் செய்ததைப் போல சுவர் ஏறி குதித்து அவனை சென்று பார்க்க அவள் மனம் அடித்துக் கொண்டது. அந்த வயதில் அவன் மேல் கரை காணாத பாசம் இருந்தது. இப்பொழுதும் அந்த பாசம் அப்படியே பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்து இருந்தாலும் அவனை பார்க்க அவளின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

மெல்ல நெருங்கிடும்போது நீ தூர போகிறாய் விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய் காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர்காத்தாடி ஆகிறேன்

மானம் சோகமாக இருக்கும் நாட்களில் அந்த வான் நிலவை கண்டு தனக்கு பிடித்த பாடலை பாடுவது அவளின் வழக்கம்.வான் நிலவை கண்டு இந்த பெண் நிலா தனது மனநிலையை தெரிவித்து விட்டு படுக்கையில் விழுந்தாள். உறக்கம் வராமல் புரண்டவள் நடு இரவில் கண்ணயர்ந்தாள்.யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்ந்தவள் பிரிக்க முடியாமல் ஒட்டி கண் இமைகளைக் கஷ்டப்பட்டு பிரித்தாள்.இருளில் முதலில் ஒன்றும் தெரியவில்லை. இருள் சற்று நேரத்தில் கண்களுக்கு பழகியதும் அறையை சுற்றி கண்களை ஓட விட்டாள்.அங்கே யாரும் இல்லை.தனது பிரம்மை என எண்ணியவள் திரும்பி படுக்க எத்தனித்த வேளை அவள் மூக்கில் மயக்க மருந்து கலந்த துணியை வைத்து அழுத்தினான் நீரன்.முதலில் திமிறியவள் பின்பு மயக்க மருந்தின் தாக்கத்தால் மெல்ல தன் சுய நினைவை இழந்தாள்.அவள் முழுதாக மயங்கி விழும் வரை காத்திருந்தவன் துவண்டு போய் கட்டிலில் விழுந்து அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

தனக்காக வலியைத் தேக்கி நின்று கண்களை முத்தமிட்டான். பின் நொடியும் தாமதிக்காமல் அவளை தூக்கித் தோளில் போட்டவன் வந்த வழியே யாரும் பார்க்காமல் அவளைத் தூக்கிக் கொண்டு பின்பக்கம் ஓடினான். அங்கே கயிற்று ஏணியோடு தயாராக இருந்தான் ராசு. அவளைத் தூக்கிக்கொண்டு ஏணியில் ஏறியவன் ராசுவிடம் அவளை கொடுத்துவிட்டு தானும் அந்தப்பக்கம் குதித்தான்.நீரனின் கார் அங்கே தயார் நிலையில் இருந்தது. செந்தூரவை தூக்கி காரில் கிடத்த ராசு புயலென வண்டியை இயக்கினான் “மச்சான் இந்த விஷபரிச்சை உனக்கு வேணுமாடா? இல்ல தெரியாம தான் கேக்குறேன்.இவ எழுந்திரிச்சா உன்ற நெலமைய யோசிச்சி பாத்தியா? சும்மாவே சாமி ஆடுவா. இன்னைக்கு அவளுக்கு ஏதோ நல்ல புத்தி இருந்துச்சி போல இல்லனா குறி தவறி உன் கையில சுட்ருப்பாளா நேரா நெஞ்சுல ஓட்ட வட சுட்ருப்பா.. சொன்னா கேளு ஊர் எல்லைய தாண்ட போறோம் அய்யனார் கோவிலுல அவள போடுட்டு கம்முனு வூட்டுக்கு போயி கவுந்தடிச்சு படுத்துக்கலாம்.. மயக்கம் தெளிச்சோன அவளே வூட்டுக்கு போயிருவா”

“உன் ரேடியோ பொட்டிய அமுத்திட்டு வண்டிய ஓட்றா என் வென்று.என்ற டார்லிங் முழிச்சிக்க போறா”

“அய்யா கருப்பு இது எந்த சுடுகாட்டுல என்ன படுக்க வைக்க போதோ தெரிலயே. என்ன மட்டும் காவந்து பண்ணி வுட்ருப்பா.. எங்கப்பனுக்கு மொட்ட போட்டு அந்தாளு காசுலயே கெடா வெட்றேன்.”அவசர வேண்டுதல் வைத்தான் ராசு. வண்டி அவர்கள் ஊர் தாண்டி நெடுந்தொலைவு சென்றது.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்