சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 27


கீதை போலக் காதல் மிகப் புனிதமானது

கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது

வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்

வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்

ஏன் மயக்கம் ஏன் தயக்கம்

கண்ணே வா இங்கே

“செர்ரி செல்லம்”

“என்ன நீரா”

“அந்த கணி பைய நம்பரு இருந்தா கொடேன். நீ எம்புட்டு ஆசையா அன்னிக்கு சொன்ன. அதுக்குள்ளார ஆக்சிடேன்ட் ஆயி நடக்க முடியாம நேரம் சிட்டா பறந்துருச்சு கண்ணம்மா”

“ஆமா நீரா இன்னும் ஒன்ற மாசம் தான் இருக்கு. அதுக்குள்ள என்ன செய்ய முடியும்”

“நீ எதுக்கு இப்ப அபசகுணமா பேசுற..பேசுற வாய கடிச்சு வெச்சிருவேன் பாத்துக்கோ.மாமன் இருக்கேன்.. நீ அந்த பைய நம்பர கொடு மொத”செந்தூரா அவனை பாவமாக பார்த்தப்படியே கணியின் எண்ணை கொடுக்க அதை வாங்கிய நீரன் உடனே கணிக்கு அழைப்பு விடுத்தான். நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது.. மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தான். கம்ப்யூட்டர் பெண் ஒரே செய்தியை பல முறை திரும்பத் திரும்ப உரைத்துக் கொண்டிருந்தாள் பல மொழிகளில்.

“ஹேய் ஒழுங்கான நம்பர தானடி கொடுத்த.. என்ன அடிச்சா சுவிட்ச் ஆப்னு வருது.. அந்த எழவெடுத்தவன் போன போட்டுட்டு எங்குட்டு போயி தொலைஞ்சான்..”நீரன் கடுப்பாய் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய

“வேணா நீரா.. நான் ஏற்கனவே நிறைய மாசமா இததான் செஞ்சுகிட்டு இருக்கேன்.. அன்னிக்கி எனக்கு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி கொடுத்தது தான் கடைசி.. அதுக்கப்புறம் ஒரு மாதம் கழிச்சு அவனுக்கு திருப்பி போன் பண்ணி பாத்தேன்..ரிங் போனுச்சு எடுக்கவே இல்லை..திரும்பத் திரும்ப அடிக்க ஒரேடியா போன் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு.. என்னால அவன காண்டாக்ட் பண்ணவே முடியல”

“இத ஏன்டி என்கிட்ட முன்னாடியே சொல்லல..நீயே இப்போதான் செத்து பொழச்சு படுத்த படுக்கயா கிடந்து எந்திருச்சு நடக்கிற..இப்ப போய் உன்கிட்ட இத சொன்னா நீ எப்படி எடுத்துக்குவேன்னு எனக்கு தெரியல..அதான் நீரா”இருந்த ஒரு நம்பிக்கையும் ஆட்டம் காண சற்று மனம் தளர்ந்து போனான் நீரன்.

ஆனால் அங்கே அவனது ஆசை மனைவி ஒட்டுமொத்த நம்பிக்கையும் வடிந்த நிலையில் விரக்தியான முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருக்க இப்பொழுது அவனுக்கு புரிந்தது. மாதம் நெருங்க நெருங்க அவள் முகம் களையிழந்து கொண்டே போனது.பழையபடி சிரிப்பில்லை துள்ளல் இல்லை ஏன் அவளது அதிகாரமும் மிரட்டலும் கூட காணாமல் போய்விட்டது.அவனை பார்த்துகொண்டு இருந்ததால் அவளை அவள் கவனிக்க மறந்து விட்டாள் என நினைத்து சிலிர்த்து போயிருந்தான். சீக்கிரத்தில் உடல் தேறி அந்த சாபத்தை உடைத்து மனைவி குழந்தை என்று சந்தோஷமாக வாழலாம் என கனவுக் கோட்டை கட்டி கொண்டிருந்தவனுக்கு கணியை தொடர்பு கொள்ள முடியவில்லை எனும் செய்தி சற்று ஏமாற்றமாக இருந்தது.

ஆனாலும் அவன் நம்பிக்கையை விட வில்லை. எப்படியும் இரண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தானே அந்த ராஜா ஜீவசமாதி அடைந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. கடவுள் அவன் பக்கம் இருக்கிறார் அதனாலேயே இத்தனை ஆண்டுகள் அவன் தேடியும் கிடைக்காத இந்த தகவல் அவனின் அன்பு மனைவி தேடி கிடைத்தது.அவனின் காதலுக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ அவள் அவன் மேல் வைத்திருக்கும் நேசத்திற்கு கண்டிப்பாக ஒரு சக்தி உண்டு.செந்தூரா அளவிற்கு அவன் விரக்தி அடைய வில்லை. அவனுக்குள் ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டே இருந்தது..

எனவே நம்பிக்கையை இழக்காமல் தன் மனதை திடப்படுத்திக் கொண்டான்.கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த செந்தூரா அருகே சென்று அமர்ந்தவன்

“செர்ரி ஏன்டி குட்டிம்மா இப்படி இருக்க. கால் வலிக்குதா.. மாமா வேணும்னா புடிச்சி விடவா”

“நடிக்காத நீரா. நான் ஏன் இப்படி இருக்கேனு உனக்கு தெரியும்..”

” கண்டு பிடிச்சுடலாம் செர்ரி..  நீ நம்பிக்கையோடு இரு.. “

“எப்படி என்ன நம்பிக்கையோடு இருக்க சொல்ற..முன்னாடி எல்லாம் உன்ன விட்டுப் போகவே என்னால முடியாது.. இப்போ என்னோட பாப்பா.. அது பொறந்து அதோட மூஞ்ச நா பாப்பேனா இல்லயானு எனக்கு தெரியல.. பாப்பா ஒவ்வொரு தடவயும் என் வயித்து குள்ள அசையறப்போ எல்லாம் எனக்கு சந்தோஷம் வரல.பயம் தான் வருது.எங்கு என்ன மாதிரியே என் புள்ளையும் அம்மா பாசம் தெரியாம வளந்துருமோனு பயமா இருக்கு..ஏன் நீரா நம்ம பாப்பா என்ன மாதிரியே பைத்தியமாயிடுமா”நீரன் அதிர்ந்து அவளைப் பார்க்க

“நீ எனக்கு தெரிய கூடாதுன்னு அலமாரியில் ஒளிச்சு வைச்சிருந்த என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ட நான் பார்த்துட்டேன்..நான் பைத்தியம் தானே நீரா.. “

“ஹேய் அடிச்சு பல்ல பேத்துருவேன்..என்னடி என்னமோ பேசிக்கிட்டு இருக்க.. நானும் போனா போகுதுன்னு எல்லாத்தயும் கேட்டுக்கிட்டே இருந்தா நீ உன் இஷ்டத்துக்கு பேசுவியா.. இன்னொரு தடவை பைத்தியம் மாதிரி உளறி பாரு”

“பைத்தியம் தானே..  பைத்தியம் பைத்தியம் மாதிரி பேசாம வேற எப்படி பேசும்”

“ப்ச் அம்மணி என்னடா கண்ணு.. உன்ற மனசாட்சி தொட்டு சொல்லு.. உன் அளவுக்கு இந்த ஊர்ல எவனுக்காவது படிப்பு இருக்கா.. உன்ற மாறி அழகி இந்த ஜில்லாவுலயே இல்லடி.. உன்ன பாத்தா ஆறடி ஆம்பள கூட அடக்கி வாசிப்பான். அவ்ளோ கெத்துடி நீயு..நீ என்னவோ வாயி புளிச்சதோ இல்ல மாங்கா புளிச்சதோனு பேனாதிட்டு இருக்க.. ரிப்போர்ட் எடுத்து பார்த்தல்ல. அதுல என்ன போட்ருக்கு.. நீ கம்ப்ளீட்டா சரியாயிட்ட.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போயிடும்.. அப்படின்னு தானே போட்டுருக்கு..  இல்ல காலம்பூரா செந்தூரா அவங்களுக்குள்ளே ஒரு உலகத்த உண்டாக்கி அந்த உலகத்திலேயே ஜீவசமாதி ஆயிடுவாங்கனு போட்டுருக்கா”

“அப்ப நா பைத்தியம் இல்லயா..”அதி முக்கியமான கேள்வியை கேட்டாள்.

“அட ராமா.. ஏன் கண்ணு இம்மா படிப்பு படிச்சு சும்மா ஒத்த கையில வண்டிய ஓடிட்டு வந்து புழுதி பறக்க சீனா நிப்பாட்டுவியே ஒரு பைத்தியம் இப்படி செய்யுமா”.. அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டாள் செந்தூரா.

“சீக்கிரம் கண்டுபிடிக்கனும் நீரா.. கண்டுபிடிச்சிருவல்ல..”கண்களில் அவ்வளவு ஏக்கம் அவளுக்கு. பணம் காசு கோடி கோடியாய் கொட்டி கிடந்து என்ன லாபம்..அவள் உயிர் பிச்சை அல்லவா கேட்க்கிறாள் அதும் அவனுடன் வாழ..பணம் முக்கியம் தான் ஆனால் அதைவிட நம்மை நேசிக்கும் உண்மையான உறவுகள் மிக மிக அவசியம்.ஒரு வழியாக அவளை சமாதானம் செய்தவன் ராசுவை காண சென்றான்.

“மச்சான் என்னடா நாப்பது இடி நான் ஸ்டாப்பா தாக்குன மாறி இருக்க..மறுக்கா உன்ற பொண்டாட்டி வேலைய காட்டிட்டாளா”என்னதான் செந்தூராவின் நிலை அறிந்திருந்தாலும் ராசுவிற்கு என்றைக்குமே அவளை பத்தின பயம் இருந்து கொண்டே இருந்தது.

“அட போடா வெளங்காதவனே.. வாயில நல்லதா நாலு வார்த்த வருதா மூதேவி..”

“அப்பாடா உன்ற பொண்டாட்டி மறுக்கா ஏழரைய இழுக்கல போலயே.. இப்பதான் மச்சான் அடி வயித்துல இருந்து குளு குளுன்னு ஒரு பீலிங் வந்து நெஞ்ச நெறைக்குது..”

“நெஞ்சே அடைச்சு போக போற ஒரேடியா”

“டேய் என்னடா நா பாசிட்டிவ்வா பேசிட்டு இருக்கேன்.. நீ என்னிய பாடையில ஏத்த வழி சொல்லிட்டு இருக்க”பீதி நிறைந்த குரலில் பேசினான் ராசு.

” நீ சொன்னாலும் இல்லனாலும் நமக்கு பாட ரெடி ஆச்சுடா.. மச்சான் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அம்மணிக்கு குழந்தை பொறந்துரும்.. நாம இன்னியும் ஒரு எழவயும் கண்டு புடிக்கல. அந்த மாங்கா மடையன் ராசா எங்குட்டு போயி ஒளிஞ்சானு தெரியலையே.. “

“அட என் வென்று.. அதான் அம்மணி கண்டு புடிச்சு சொல்லிச்சே”

“அங்கதான் பிரச்சன.. அந்த டீடெயில்ஸ்ஸ அவளுக்கு கொடுத்தானே அந்த பயல காண்டாக்ட் பண்ண முடியலடா.. அவன ஆளையே காணல..”

“என்னடா சொல்ற”

“ஆமா டா இப்போதைக்கு அந்த ராசா போனா ரெண்டு ஊரு தான் நமக்கு தெரிஞ்ச விஷயமே.. இந்த ரெண்டு ஊர்ல ஏதோ ஒரு ஊர்ல தான் அந்த ராசா சமாதி ஆயிருக்கான்”

“அந்த கட்டையில போறவன் கம்முனு இங்குட்டு எங்குட்டாச்சும் சமாதி ஆயிருக்க கூடாதா..இப்ப எங்குட்டுன்னு அவன் சமாதியா தேடுறது”

“மச்சான் நாம மொத சிவபுரம் போலாம்டா”

“போயி.. இல்ல போயி என்னத்த பண்ண போற”

“ஹான் புடுங்க போறேன்.. நீயும் வரியா.. டேய் தேவாங்கு நாம அங்க போயி தேடலாம்டா.. தேடி தான் ஆகணும்.. இல்லனா என்ற செர்ரி என்ன விட்டு போயிருவா மச்சான்.. என்ற அப்பன போல குழந்தய வளத்துட்டு அது மண்டையிலயும் இந்த நாசமா போன சாபத்த ஏத்த எனக்கு இஷ்டம் இல்ல.. வாழ்வோ சாவோ எனக்கு என்ற செர்ரி கூடா தான்..இந்த தலமுறையோட இந்த சாபமும் அழிஞ்சு போட்டும்..செர்ரி போய்ட்டா நானும் போயிருவேன் மச்சான்..”

“தம்பி உணர்ச்சிய கொஞ்சம் கட்டுப்படுத்துங்க.. நீங்க உங்களுக்கு மட்டும் குழி வெட்டிக்கல..ஆழ குழி வெட்டி அதுல செவனேனு இருந்த என்ற கால புடிச்சும் இழுத்து உள்ளார தள்ளி உட்டுடிங்க..”

“அது வேற மச்சான்.. என்னதான் பண்ண போறேனோ.. நேரம் வேற கொறவா இருக்கு..அந்த கணி பயலோட அட்ரஸ செர்ரி கிட்ட வாங்கிட்டு மொத நாம திருச்சி போறோம். அங்கதான் அவனோட வூடு இருக்குனு செர்ரி சொன்னா.. நேரா அவன் வூட்டுக்கே போயி அவன் கிட்ட ஒதவி கேக்கலாம்டா”

“ஐடியா நல்லாத்தான் இருக்கு.இதுக்கு உன்ற பொண்டாட்டி ஒத்துக்கணுமே”

“அதெல்லாம் பேசிக்கலாம் டா.. நீ அப்பாரு கிட்ட சொல்லி கெளம்ப ரெடியாவு.. அந்த பய இல்லனா நாமளே சிவபுரம் போயி அந்த இடம் இல்லனா திரிம்பாக் போறோம்”

“நாமளே வாழ வழியத்து போயி வழிய தேடி போறோம்.. என்னமோ டூர் போறல மச்சான் சீன் போடுற”அவனை நீரனால் முறைக்க மட்டுமே முடிந்தது. செந்தூரா முதலில் மறுத்தாலும் அவளின் கன்னத்தை இரு கரங்களில் தாங்கி

“செர்ரி இது நமக்காக.. நம்ம வாழ்க்கைக்காக..நீ செத்துடுட்டா நம்ம குழந்தைய வெச்சிட்டு நா தனியா வளப்பேன் அப்டினு நெனைக்காத கண்ணு.. நீ இல்லாம நா இருக்க மாட்டேன். என்ற பொண்டாட்டிய நானே கொன்னுட்டேன்னு குற்ற உணர்ச்சில செத்தே போய்டுவேன்.”

“அப்ப பாப்பா”

“அதான் இருக்காரு உன்ற அப்பன். அந்தாளு வளக்கட்டும் இல்ல உன்ற மாமா வளக்கட்டும்.. ஆனா அந்த குழந்தை மேலயும் இதே சாபம் வரும்”

“சொல்லாத நீரா.. வேணா.. நீ கெளம்பு உனக்காக நா காத்துட்டு இருப்பேன்.. அந்த சாபம் நம்மளோட போய்ட்டும்”அவளின் இதழில் ஆழ முத்தம் ஒன்றை பதித்தவன் தில்லையிடமும் குகனிடமும் சொல்லிவிட்டு சீமதுரையிடம் தோப்பை பார்த்து கொள்ள கூறி ராசுவுடன் கிளம்பினான்..

முதலில் இருவரும் செந்தூரா கொடுத்த கணியின் வீட்டிற்கு திருச்சி செல்ல அங்கே அவனது விலாசத்தில் ஆள் இல்லை. வீடு பூட்டி கிடந்தது. அவர்கள் சில மாதங்களாக இங்கே இல்லையென பக்கத்து வீட்டு அம்மா கூறினார். வேறு வழியின்றி இருவரும் சிவபுரம் வந்தனர்.அங்கிருந்த சிவன் திருத்தலங்களை எல்லாம் தரிசித்தர்களோ இல்லையோ இருவரும் அங்கிருந்த ஒருவர் வீட்டில் பணம் கொடுத்து தாங்கி எங்கேயாவது ஜீவ சமாதி இருக்கிறதா என தேடி அலைந்தனர்.அங்கிருந்த கோவில்களில் சிலதில் கல் வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்தன.

ராஜ ராஜ சோழன் வம்சத்தினரால் உண்டான கோவில்கள் அவைகள். ஒருவாரம் ராவும் பகலுமாக நண்பர்கள் இருவரும் ஊரே சல்லடை போட்டு தேடியும் அங்கிருந்த குறி சொல்லுப்பவர்கள் சாமியாடிகள் சித்தர்கள் என யாரிடம் கேட்டும் பலன் பூஜியமே.சரி ஊர் மக்களுக்கு தெரியவில்லையென ஒரு குறி சொல்பவன் பேச்சை கேட்டு அங்கிருந்த மலையில் ஏறி குகை ஒன்றில் வாசம் செய்யும் ஓநாய் சித்தரை காண சென்றனர். அங்கே சென்றால் ஓநாய் தான் இருந்ததே தவிர சித்தரை காணவில்லை. உயிரை கையில் பிடித்து கொண்டு இருட்டில் துண்டை காணோம் துணியை காணோமேன்று ஓடிய ஓட்டம் அவர்களுக்கு தான் தெரியும். பொய்யான தகவலை சொல்லி அவர்களிடம் பணம் பிடிங்கிய குறி சொல்லுபவனை கண்டு பிடித்து நான்கு அப்பு அப்பி குறுக்கெழும்பில் மிதித்த நீரனை இழுத்து கொண்டு சென்றான் ராசு.

அன்று இரவு ரயிலில் இருவரும் மகாராஷ்டிரா சென்றனர். இரண்டு நாள் பயணத்தில் கழிய இருவரும் மகாராஷ்டிரா வந்திரங்கினர்.. அங்கிருந்து திரிம்பாக் சென்றனர்.கோதாவரியை பார்க்கும் போது நீரனின் உள்ளத்தில் அதுவரை இருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது.

திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து இருபத்தெட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.

இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.

இங்கே ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி இருவரும் திரிம்பகேஸ்வரர் ஆலயத்தை பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் அங்கிருந்தோரிடமும் கோவிலில் பூஜை செய்பவர்களிடமும் விசாரித்தார்கள். நல்ல வேளை நீரனுக்கு அறை குறை என்றாலும் ஓரளவு ஹிந்தி தெரிந்தது. அதை வைத்து வந்த வேலையை பார்த்தனர்.

அங்கிருந்த வாயோதிக மக்களிடம் கோவிலை சார்ந்தவர்களிடம் சித்தர்கள் முனிவர்கள் என அங்கேயும் நாயாய் அலைந்து திரிந்து விசாரித்தார்கள்.திரிம்பாக்கை சுற்றி உள்ள இடங்களிலும் தெய்வ தலங்களிலும் சென்று விசாரித்தனர்.சிலர் இவர்களை பைத்தியம் என்று நினைத்தனர். சிலரோ தங்களுக்கு தெரிந்த கல்லறைகளை காட்டி இதுதான் சமாதி என்று கூறினர்.

அங்கேயே ஒரு மூன்று வாரம் நீரனும் ராசுவும் அங்கேயே இருந்து உணவு தண்ணீர் இல்லாமல் தேடி அலைந்தும் பலன் இல்லை.இங்கே தன்னவனை எண்ணி செந்தூரா வேதனையில் சரியாக உண்ணாமல் மரண பயத்தில் உளன்று ஆளே பாதியாகி விட்டாள்.

இன்னும் ஒன்றரை வாரம் தான் உள்ளது, குழந்தை பிறக்க மருத்துவர் குறித்த திகதிக்கு. விதியால் இவர்கள் வெல்லப்படுவார்களா? இல்லை விதியை அன்பால் வெல்வர்களா?

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்