சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 20


நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை

நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை

நேசத்தினால் என்னை கொன்றுவிடு

உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு

என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு…

“யோவ் தில்லை என்னய்யா நானும் அப்ப புடிச்சு பாத்துட்டே இருக்கேன் ரொம்ப துள்ளுற.. செந்தூரா ஒம்ம மவ தான்.. நீதான் பெத்த.. நா என்ன நானா பெத்தென்னு சொல்லிட்டு திரியுறேன்.. பெத்து அத இன்னொருத்தன் கையில புடிச்சு கொடுத்தாச்சுய்யா இனி நல்லதோ கெட்டதோ அவனுக்கு தான் மொத உரிம.. நீரன விட தங்கமான பய ஒம்ம மவளுக்கு கெடைப்பானா சொல்லுய்யா..என்னதான் ஒம்ம மவ ஆசப்பட்டாலும் அவனும் நல்லவா இருக்குறவாசி தானே நீயும் போயி சம்மதம் பேசுன.. இப்ப புருஷன் பொண்டாட்டி குள்ளார என்ன எழவு நடந்துச்சோ ஆரு கண்டா..ஒரு கருமமும் தெரியாம எதுக்கு அந்த பய மேல போலீஸு கம்பளைண்ட்டு கொடுத்த. என்ன கேக்க நாதியில்லனு நெனச்சிட்டியோ..ஒம்ம அளவுக்கு பெரிய ஆளுங்கள எங்க சட்ட பையி உள்ளார போடாம இருக்கலாம்.. ஆனா எங்களுக்கும் நாலு ஆளுங்க தெரியும்..ஒழுங்கு மறுவாதியா நீரன வெளிய வுட சொல்லுய்யா”சீமதுரை உட்சபட்ச கடுப்பில் தில்லையிடம் எகிற

“எப்பா எப்படிப்பா எனக்கு அப்டியே புல்லரிக்குது போ.. உனக்கு புள்ளையா பொறந்ததுக்கு இன்னைக்கு தான்யா நா பெரும படுறேன். அந்தாளு ஆரு அவன் பவுசு என்ன அப்டி பட்ட ஒருத்தன் மூஞ்சிக்கு முன்னாடி கைய நீட்டி நீட்டி என்னமா பேசுற.. ப்பா இம்புட்டு தகிரியத்த இத்தன நாளா எங்கய்யா பதுக்கி வெச்சிருந்த..உன்ற ஒவ்வொரு பேச்சுக்கும் அனல் தெரிக்குதுப்பா”

“டேய் மவனே நானே ஒரு ப்லொவ்ல அடிச்சு வுட்டுட்டு இருக்கேன்.. நீ வேற ஏன்டா அவன ஏத்தி விடுற.. சுத்தி ஊரு பெருசுங்க இருக்குங்க.. அவன் எதுவும் செய்ய முடியாது எல்லாம் அந்த தகிரியம் தான்.. உன்ற அய்யன் ஆரு”

“லூசாப்பா நீயு.. உனக்கே நீ ஆருன்னு தெரியலையா.. அம்மாவ அடையாளம் தெரியுதா இல்ல அதும் இல்லயா”

“என்ற குடிய கெடுக்க வெளியாலு ஆரும் வேணாம்டா நா பெத்த ஒண்ணே போதும்.. த்து எச்சகல நாயே..உன்ன பொறவு பேசிக்குறேன் இரு.. யோவ் தில்லை என்னய்யா மல முழுங்கி மகாதேவன் மாறி நிக்குற.. நா சொல்றது காதுல விழுதா இல்ல காத்தோட போகுதா”நீரனை உள்ளே வைத்திருக்கும் விஷயத்தை ராசு சீமதுரைக்கு அழைத்து சொல்ல அவரும் நிமிடம் கூட தாமதியாமல் ஊரில் வெள்ளையும் சொள்ளையுமாக திரியும் நாளைந்து பெருசுகளை அள்ளி சுமோவில் அடைத்து கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தார்.

என்னதான் ராசுவை கரித்து கொட்டி மிதித்து வளர்திருந்தாலும் நீரன் என்றால் கொள்ளை பிரியம் சீமதுரைக்கு. நண்பனின் மகன் என்ற பாசமோ இல்லை பெரியவர்களிடம் நீரன் காட்டும் மரியாதையோ அல்ல அவனின் துறுதுரு குணமோ என்னவோ ஒன்று அவனை அவருக்கு பிடிக்க வைத்தது.பெற்ற மகனை விட நீரன் அவருக்கு ஒசத்தி தான்.அவன் இப்பொழுது போலீஸ் கஸ்டடியில் இருப்பதை கேள்வியுற்று தில்லையிடம் எகிறி கொண்டிருந்தார்.குகனும் மாமனிடம் பேசி பார்த்து நாக்கு ஓரமாய் தள்ளிப் போய் அமர்ந்து விட்டார். தில்லைக்கு நல்ல காலத்திலேயே நீரனை பிடிக்காது. இதில் மகளை சுயநினைவு இல்லாமல் பார்க்கவும் பதறி விட்டார்..

இலவச இணைப்பாக மார்பில் சூட்டு தழும்பு என மருத்துவர் கூறியது அவருக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது.. கண்டிப்பாக நீரன் தான் இம்மாதிரி தனது மகளை கொடுமை செய்து இருக்க வேண்டும் என அவர் எண்ணினார்.. இருந்தாலும் அவரின் நியாயமான மனது செந்தூரா மேல் ஒருவனால் இம்மாதிரி கை வைக்க முடியுமா என எதிர் கேள்வி கேட்டது.. மகளைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவரால் மருமகனை நூறு சதவீதம்  சந்தேகிக்க முடியவில்லை.

இருந்தும் பெற்ற மனதில்லையா எப்பொழுதும் கம்பீரமாக நடந்து வரும் தன்னுடைய மகள் சுயநினைவின்றி கிடக்கவும் அந்த தந்தை உள்ளம் குமுறி அறிவிழந்து அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்து விட்டது..மார்பில் மட்டுமல்ல செந்தூராவை பரிசோதித்த பெண் மருத்துவர் அவளது உடலில் இம்மாதிரி சின்னச்சின்ன வெட்டு காயங்கள் நிறைய உள்ளது என தில்லையிடம் கூறியிருந்தார்..அந்தக் காயங்கள் எல்லாம் பார்க்கும்போது அவை உண்டாகி நீண்ட காலங்களாக இருக்கக்கூடும் என யூகித்து கூறினார்..இப்பொழுது நடந்த நிகழ்வுக்கு வேண்டுமானால் தில்லை நீரனின் மீது பழியைப் போடலாம்..

ஆனால் இதற்கு முன்பே ஏற்பட்ட அந்த காயங்களுக்கு அவர் என்னவென்று யார் மேல் பழியைப் போடுவது.. அந்த காயங்கள் எல்லாம் எப்படி ஆனது.  செந்தூரா பிறந்து வெள்ளைத் துணியில் அவளை சுற்றி அவரது கரங்களில் கொடுத்த அன்றிலிருந்து அவளை அழுத்தி கூட தூக்கியதில்லை தில்லை..மனைவி இறந்த பின்பும் மகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.அவள் அகம்பாவி திமிர் பிடித்தவள் இன்னும் என்னனவோ ஊர்மக்களும் உறவினர்களும் புகார் அளித்த போதும் அதை அனைத்தையும் தூசி தட்டி விட்டு தன் மகளின் பக்கம் நின்றார்.அவளின் சொல் வேத வாக்கென கோல் இல்லாமல் ஆடினார்.

சீமதுரை காட்டு கத்து கத்திக் கொண்டிருக்க அதை எதையும் காதில் வாங்காமல் தில்லை பிடித்து வைத்த பிள்ளையார் கணக்காக அமர்ந்திருந்தார். இந்த காலத்திற்கு இவர் வாயை திறக்கப் போவதில்லை என எண்ணிய சீமதுரை தனக்கு தெரிந்த அரசியல்வாதி ஒருவரை வைத்து நீரனை வெளியே அழைத்து வந்தார்..அதற்கே பல இடையூறுகள்.. ராசு பார்த்திபன் சீமதுரை மூவரும் நீரனுடன் மருத்துவமனைக்குள் நுழைய அவர்களை அடையாளம் கண்டு தாதி ஒருவர்

“சார் உங்கள போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாங்கன்னு உங்க வைய்ப் ஒரே ப்ராப்ளம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. எங்களால அவங்கள கன்றோல் பண்ணவே முடியல..பாவம் அவங்களோட அப்பா..மனுஷன் சிங்கம் மாதிரி இருந்தார்..இப்போ அந்த கொடுமய சொல்ல முடியல.. உங்க வைப்பால உங்களோட மாமனாருக்கு இன்னொரு பெட்டுல்ல தனியா ட்ரிப்ஸ் ஏறுது.. நெத்தியில மூனு தையல் வேற”

“என் வைப்புக்கு கன்ஸியஸ் வந்துருச்சா..”

“அது வந்த உடனே அவங்க உங்கள பாக்கணும்னு சொன்னாங்க..நாங்க அவங்க அப்பாவ உள்ள வரை சொன்னோம்.. உள்ள வந்தவரு உங்கள போலிஸ் புடிச்சிட்டு போயிருச்சுன்னு சொன்னதுதான் லேட்டு ஆடுனாங்க பாருங்க ஒரு ஆட்டம்.. மூனு நர்ஸ்சு ரெண்டு டாக்டர்ஸ் யாராலயும் புடிக்க முடியல.. கையில ஏறிட்டியிருந்த ட்ரிப்ஸ எல்லாம் பிச்சி வீசிட்டு அவங்க அப்பா கழுத்த புடித்து நெறிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்ககிட்ட இருந்து அவங்க அப்பாவ காப்பதுறகுள்ள நாங்க செத்துட்டோம்..எங்களால முடியாம அவங்களுக்கு இன்ஜெக்ஷன் போட்டு தூங்க வச்சிருக்கோம்.. ஆனாலும் ஒன்னு சார்..அவங்க உங்கள ரொம்ப லவ் பண்றங்க. அரை மயக்கத்தில கூட உங்க பேரு தான் சொல்றாங்க..கொஞ்சம் பொஸ்ஸசிவ் போல.. நீங்க போய் உங்க வைப்ப பாருங்க..”

“மச்சான் நர்ஸ்ஸக்கா சொல்லிட்டு போறத பாத்தியா..உன்ற மாமனாரு நிலமை கந்தலாயிடும்னு தெரியும் ஆனா இந்த அளவு இல்ல..பாவம் தில்லை உன்ற பொண்டாட்டி தொல்லயால எப்டி நொந்து போயி கெடக்கோ”.. நீரன் வேகமாக செந்தூரவை பார்க்க சென்றான்.. ட்ரிப்ஸ் ஏறிகொண்டிருந்த கரத்தை மென்மையாக பற்றி அவளின் அருகே அமர்ந்தான்..நர்ஸ் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது முதலில் ஏறிக் கொண்டிருந்த ட்ரிஸ்ப்சை அவள் பிடுங்கி எறிந்திருக்க வேண்டும்.. அதனால் அவள் கையில் ஏற்பட்ட வீக்கம் அவளது சிவந்த கரத்திற்கு பயங்கரமாகத் தெரிந்தது.. நல்ல கொழு கொழு அமுல் பேபி மாதிரி இருந்தவள் ஒரே நாள் பிரச்சனையில் சுனாமியில் அடிப்பட்டு உயிர் தப்பியவள் போல அலங்கோலமாக இருந்தாள்..அவளது உள்ளங்கையில் தனது சூடான உதட்டைப் பொருத்தினான் நீரன்.ஏற்கனவே மயக்க மருந்தின் வீரியம் குறைந்து அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தவள் தன்னவனின் ஸ்பரிசம் உணர்ந்து கண் திறந்தாள்..

கண்கள் சிவந்து முகம் வீங்கி சோர்ந்து ஒரே நாளில் கருத்து உதடுகள் காய்ந்த நிலையில் ஒரு நாடோடியாக அவள் முன்பு அமர்ந்து இருந்தான் அவளது கணவன்.. அவனது இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது. அந்த குற்ற உணர்ச்சியின் காரணமாக அவளது விழிகளில் கண்ணீர் நிற்காமல் வழிய தொடங்கியது..

“ஸ்ஸ்ஸ் என்னடி இது.. இப்ப போயி அழுந்துட்டு இருக்க..”

“இல்ல நீரா என்னால தான உன்ன போலீஸ் புடிச்சுட்டு போயி.”சில கேவல்களுக்கு பிறகு”ரொம்ப அடிச்சிட்டாங்களா”.. இதைக் கேட்கும்போது அவளது கண்கள் அவன் மேனியை அலசியது. உண்மையில் சொல்லப்போனால் அந்த காவல் அதிகாரி தில்லைக்கு பயங்கர விசுவாசி. தில்லை சொன்னதன் படி நீரனை பிரித்து மேய்ந்திருந்தார்.. ஆனால் அனைத்துமே உள்ளடிகள்..வெளியே வீக்கம் மட்டும் தெரிந்தது.. ஏற்கனவே அவனின் கோலம் கண்டு அழுது கொண்டிருக்கும் மனைவியிடம் அவளின் அப்பா அடிக்க சொல்லியது மட்டும் தெரிந்தால் கண்டிப்பாக இப்பொழுதே ட்ரிப்ஸ் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு தில்லையிடம் சென்று அவரை நெஞ்சில் மிதித்தே கொன்று விடுவாள். எனவே

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா.. உங்க அப்பா உன்ற மேல இருக்கிற பாசத்துல என்ற மேல கம்பிளைன் குடுத்துட்டாரு.. அவரு செஞ்சது தப்பு இல்லயே. நான் அவரு இடத்துல இருந்தாலும் இததான் பண்ணியிருப்பேன்..பெத்த தகப்பன் இல்லயா..”

“அப்றம் ஏன் மூஞ்சி வீங்கிருக்கு”

“அது நேத்து நீ செஞ்ச வேலைக்கு எங்கடி தூங்குறது..ஏன் செர்ரி இப்டி பண்ண.. என்ற உடம்பு முழுக்க சூடு வெச்சிருந்தாலும் நா இந்த அளவுக்கு துடிச்சிருக்க மாட்டேன்டி.. அப்டி என்ன எழவெடுத்த கோவம் உனக்கு.. இனிமே இப்டி பண்ணி பாரு.. என்ற ஆண்ம சாகுதோ இல்லயோ நா செத்துருவேன்டி..”

“வேணா நீரா அப்டி சொல்லாத..நா உசுரோட இருக்குற வரைக்குமே உனக்கு ஏதும் ஆக விட மாட்டேன்..”அவளை கனிவுடன் பார்த்தான் நீரன்.அவள் தன் மீது பைத்தியமாக இருக்கும் படியாக அவன் எப்பொழுது நடந்து கொண்டான்?

சீண்டல் பார்வை, சின்ன கண்ணடிப்பு, பறக்கும் முத்தம், ஒளிவு மறைவான ஜாடை, காதல் பார்வை இப்படி எதுவுமே அவர்களுக்குள் இருந்தது இல்லையே..அறியாத வயதில் சண்டை. அறிந்த வயதில் மரணத்தின் மீது உள்ள பயத்தால் தன்னையே இழக்க தயாராக இருந்த அவளின் காதலை இழந்து விட்டான்.. அதன்பிறகு நண்பனின் உயிரைக் காக்க வேறு வழி இல்லாமல் தன்னை உண்மையாக நேசிக்கும் அவளை கடத்திச் சென்று கல்யாணம் செய்து அந்த சாபத்தை உடைக்க திட்டமிட்டான்.. எப்படி யோசித்தாலும் இதில் முழுக்க முழுக்க தவறு அவன் மேல் மட்டுமே உள்ளது..

அவள் மேல் என்ன தவறு உள்ளது? இவனை துப்பாக்கியால் சுட்டதா? அதற்குக் கூட அவளிடம் ஒரு காரணம் இருந்ததே. ரொம்பவும் நியாயமான காரணம்.நீரன் யோசிக்க அனைத்து தவறுமே அவன்மேல் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் அவளின் கண்களில் தான் எத்தனை காதல். அவன் புத்தகங்களில் படித்திருக்கிறான் பெரிய பெரிய அறிஞர்கள் கூறிய கூற்று ஒன்று அவனது நினைவில் அந்த கணம் தோன்றியது.

உலகிலேயே பெரிய சந்தோசம் என்ன தெரியுமா..நாம் எந்த காரணமும் எந்த தேவையும் இன்றி இன்னொருவரால் நேசிக்கப்படுவது.. எதிர்கால திட்டத்தை வைத்தோ வெளி தோற்றத்தை வைத்தோ ஏதோ ஒரு காரணத்தால் ஒருவித ஈரப்பால் நாம் காதலிக்கப்படுகிறோம் பெரும்பாலும். முக்கால்வாசி பேருக்கு கண்டிப்பாக முதல் காதல் தோல்வியிலேயே அமைந்திருக்கும். அதற்கு காரணம் அது காதல் தானா என கண்டறியும் முன்னரே நாமே அதற்கு காதல் என்று பெயரிட்டு அந்த உறவில் மாட்டிக் கொள்ள அதன் பிறகு அந்த உறவில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் நம் கண்முன்னே வந்து போகும்.

அப்பொழுதும் விடாமல் நமது காதல் தோற்கக்கூடாது என்ற ஒரே எண்ணத்தோடு பல்லைக் கடித்துக்கொண்டு காதல் என்ற பெயரில் நாம் செய்யும் கூத்தை பிடிவாததோடு செய்து கொண்டிருப்போம்.. எவ்வளவு நாள் பிடிக்காத ஒரு காரியத்தை பிடிவாதமாக செய்வது.. ஒரு கட்டத்தில் அந்த பிடிவாத கயிறு அறுந்து விடும். அழுகை வரும் ஒரு வாரம் ஒரு மாதம் ஏன் ஒரு வருடம் கூட அந்த உறவில் ஏற்பட்ட பிரிவின் தாக்கம் நம்மை சுழற்றி அடிக்கும். காலம் ஒரு சிறந்த மருந்து..

அந்த உறவில் ஏற்பட்ட வலியை மறக்கடித்து நாட் போக்கில் நமக்கே நமக்கென பிறந்திருக்கும் ஒரு இணையை நாம் சந்திப்போம். அந்த இணை இந்த உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கலாம்.நமக்கென்று உரிய காலம் வரும்பொழுது ஏதோ ஒரு வகையில் அவர்கள் நம் வாழ்வோடு இணைவார்கள்.என்னதான் அவர்கள் மீது நமக்கு காதல் வந்தாலும் அதை அவர்களிடம் சொல்லவே கூடாது என்று நமது வாழ்க்கையில் முதலில் பட்ட அடி ஞாபகம் வந்து வாய் மூட வைக்கும்.

அப்பொழுதும் மெய்யான அந்த நேசம் நமது உறுதியையும் மீறி வெளியே வரும்.கட்டுக்கடங்காத காதல் அவர்கள் மேல் நமக்கு தோன்றும்.அந்த உறவுக்கு காதல் என்று பெயரிட்டு நம்மை நாமே அடக்கிக் கொள்ளக் கூடாது. காதல் என்ற பெயர் யாரோ ஒருவரால் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.. அவர் காதலை எந்த கண்ணோட்டத்தில் பார்த்திருப்பார் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காதல் யார் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.சிரித்து மகிழ்ந்து குழைந்து கொஞ்சி விளையாடும் போது மட்டும் அந்த இணை நம்மோடு இருக்காது.. அழுகை வேதனை விரக்தி துக்கம் தனிமை அவமானம் புறக்கணிப்பு வறுமை துரோகம் இப்படி நாம் உடைந்து சிதறும் நேரத்திலும் நம்மை அள்ளி எடுத்து ஒருங்கிணைக்க அந்த இணை நம்மோடு பயணிக்கும்..

மகிழ்ச்சியோ துக்கமோ அப்படி ஒரு இணை கிடைத்தால் அதை தவற விடக்கூடாது. செந்தூரா அம்மாதிரி இணையாக நீரனின் கண்களுக்கு தோன்றினாள். அவளுக்கு மனோரீதியாக ஏதோ ஒரு வலி இருக்கிறது..தன்னுடைய சாபவிமோசனம் ஒரு பக்கம் இருக்கட்டும்.முதலில் தங்களின் குறையை தீர்க்க முடிவு செய்தான் நீரன்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்