சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 9


ஊருக்குள் நீரனின் கார் நுழையும் போதே தெருக்களில் நின்ற மக்கள் இவர்கள் வண்டியைப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.ஓரக்கண்ணால் அவர்கள் அனைவரையும் வண்டியினுள் இருந்தவாறே பார்த்த செந்தூராவிற்கு தொண்டை அடைத்துக் கொண்டது.  அவள் என்ன தவறு செய்தாள்? யோசித்துப் பார்த்தாள்.. அவள் செய்த தவறு அவளுக்குப் புலப்பட்டது. மண்டையில் ஓங்கி அடித்தது போல் அந்த தவறு பளிச்சென்று அவள் மூளையில் மின்னலிட்டது. இதோ ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து லாவகமாக ஸ்டியரிங்கை வளைத்து கொண்டிருக்கிறானே இந்த படுபாவி நீரனை காதலித்தது மட்டுமே அவள் செய்த மாபெரும் தவறு.

“மச்சான் ஊரே தெரண்டு நிக்குது.. வண்டியவே வெறிக்க வெறிக்க பாக்குறானுங்கனா வண்டிக்குள்ளரா இருக்கிற நம்ம மேல என்னா வெறியில இருப்பானுங்க.. பேசாம ஒன்னு செய்யலாம்டா வண்டிய திரும்பு அப்டியே இந்த ஊர விட்டு எஸ்ஸாயிடலாம்..”நடுங்கி கொண்டே கூறினான் ராசு.

“மூடு.. இப்ப எதுக்கு பயந்து சாகுற அதான் நா இருக்குறேன்ல”

“நீ இருக்குறது தானே என்ற பிரச்சனையே”வண்டி நேராக செந்தூரவின் வீட்டிற்கு செல்லாமல் நீரனின் வீட்டை நோக்கி சென்றது. அவள் அதைக் கவனித்து இருந்தாலும் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“டேய் என்னடா அம்மணி வூட்டுக்கு போவாம உன்ற வீட்டுக்கு வந்துருக்க”

“இதான் டா இனிமே அம்மணிக்கு வூடு.. அது அம்மணியோட வெளங்காத அப்பன் வூடு..”சொல்லிக்கொண்டே கார் கதவை திறந்து கீழே இறங்கியவன் இன்னும் இறங்காமல் இறங்க பிடிக்காமல் அமர்ந்திருந்தவளை பார்த்து கொண்டே

“ராசு என்னடா அம்மணிக்கு இந்த வண்டிய ரொம்ப புடிச்சு போச்சு போலயே.. வண்டிய வுட்டு மனுஷி இறங்குற வழிய காணோமே..இப்ப இறங்கி வராங்களா இல்ல வண்டிக்குள்ளயே சமாதி ஆவ போறாவளா”அவனை முறைத்து கொண்டே இறங்கினால் செந்தூரா.சின்னு நீரனை கண்டதும் ஓடி வந்தான்.

“எண்ணே பெரிய ஆளுண்னே நீயு.. ஊரே பாத்து நடுங்குற அம்மணிய தூக்கிட்டு போயிட்ட.. ஆமா அப்டியே அம்மணிய இழுத்துட்டு ஓடாம எதுக்கு நம்மூருக்கு கூடிட்டு வந்துருக்க. உனக்கு கிறுக்கு ஏதும் புடிச்சு போச்சாங்குறேன்? இல்ல உன்ற ஓட்ட வண்டி அம்பூட்டு தூரம் ஓடலயா”

“வயசுக்கு ஏத்த பேச்சு பேசுன்னு எத்தினி வாட்டி சொல்லிருப்பேன்..பேசுவியா பேசுவியா”நீரன் சின்னுவின் முடியை பிடித்து ஆட்டி கொண்டே ஊரை நோட்டம் விட்டான்.குறுகிய சந்தினுள் புழுதி பறக்க கருப்பு ஸ்கார்பியோ ஒன்று வந்து நின்றது.ஊரே நீரனின் வீட்டின் முன் குழுமிருக்க ராசு கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டான்.

“ஏன்டி இவளே அந்த புள்ளய இழுத்து ஓடுனவன் அப்டியே ஓடாம இங்கன எதுக்குடி மறுவடியும் கூட்டிட்டு வந்துருக்கான்”

“நா என்னத்த கண்டேன்.. ராத்திரி இழுத்துட்டு போனவன் மதியக்கு வருவான்னு கனவா கண்டேன்.. அந்த ராங்கி முகரைய பாத்தா செவ செவன்னு செவந்து போயில கெடக்கு.. இந்த பையன் கைய கிய்ய மேல வெச்சி புட்டானோ”

“ம்க்கும் இழுத்துட்டு போனவன் பூச போடாம சாமி மட்டும் கும்பிடுருப்பானாக்கும்.. அதெல்லாம் கெடா வெட்டி பூச செரப்பா போட்டு புட்டு தான் மிதப்பா நிக்குறான் பாரு ஜமீனு மவன்”

“அப்டி கேளு ஆத்தா.. குஸ்கா மட்டும் திங்குற மொகறையா அது”ராசு கூட்டத்தில் பெண்களுக்கு மத்தியில் நின்று குமட்டில் கை வைத்து கேட்க புறணி பேசும் ஆர்வதில் அவனும் கூட்டு என்பதை மறந்து

“அதானே”என்று தன் சுய கண்டுபுடிப்பை மெச்சி கொண்டது பாட்டி ஒன்று.ஸ்கார்பியோ ஒழுங்காக கூட நிற்கவில்லை அதற்குள் அவசரமாக கதவை திறந்து கீழே இறங்கினார் தில்லை.அவரை தொடர்ந்து குகனும் இறங்க இருவரும் செந்தூராவை நோக்கி வேகமாக வந்தனர். தந்தையைக் கண்டதும் இதுவரை தன் கட்டுப்பாட்டில் இருந்த கண்ணீர் கரை உடைத்து வெளியேறியது செந்தூராவிற்கு.அவளைக் காணாமல் தேடி அலைந்திருப்பார்கள் என்பதை அவர்கள் முகத்தை வைத்து  கணித்திருந்தாள் அவள்.

“கண்ணு என்னடா ஆச்சு.. உன்ன காணாம அய்யன் தவிச்சு போய்ட்டேன்டா..உனக்கு ஒன்னும் ஆவலையே”கண்ணீர் முத்தமிடும் கன்னங்களுடன் தந்தையின் கேள்விக்கு பதில் தலையசைத்தாள் செந்தூரா.

“இந்த எடுபட்ட பய உன்ன தூக்கிட்டு போய்டானா இல்ல அவன் ஏதாச்சும் மெரட்டி பயந்து போயி நீயாவே போய்டியா”

” நான் நல்லா தூங்கி கிட்டு இருந்தேன் டேடி. யாரோ என்ற ரூமுல என முறைச்சி முறைச்சி பார்க்குற மாதிரி இருந்துச்சு.. சட்டுனு கண்ணு முழிச்சு பார்த்தேன்.  அவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருக்கு. நான் கண்ணு முழிச்சு பாக்குறப்போ நான் வேற இடத்துல இருந்தேன்”அவள் முழுதாக கூட சொல்லவில்லை அதற்குள் மகளை கடத்திக் கொண்டு போய் இருப்பது உறுதியாகி விட அவன் மேல் பாய்ந்தார் தில்லை.

“டேய் தாயோளி பொறுக்கி நாயே எம்புட்டு தகிரியம் இருந்தா என்ற பொண்ணு மேல கைய வைப்ப.. உன்ன வெட்டாம வுட மாட்டேன்டா.. எங்கடா அந்த அருவா”

“மாமா கொஞ்சம் இருங்க.. பொறுமையா பேசுவோம் இது நம்ம பொண்ணோட வாழ்க்க மாமா”

“என்ற பொண்ண தூக்கிட்டு போயி ஒரு ரா முச்சுடும் வெச்சிருந்து கூட்டியாந்துருக்கான்.. ராசா மாறி இருந்த ஊருல என்ன கேவலப்படுத்தி புட்டான்… நம்ம பொண்ணு நேத்திக்கு இவன சுட்டத்துக்கு பழிவாங்கி புட்டான். என்ற கௌரவம் என்ன? மறுவாதி என்ன? இனிமே ஊரு சனம் முன்னாடி நா எப்படிடா என்ற மூஞ்சிய காட்டுவேன்”வாயின் அருகே கையை வைத்து மறைத்து கொண்டு

“இப்ப எப்டி மானங்கெட்டு போயி காட்றியோ அப்டித்தான்யா தொல்ல”

“அடேய் எவன்டா அது.. பொண்டு பொடுசுக முந்தானை பின்னாடி மறைஞ்சிருந்து பேசுறவன்.. தகிரியம் இருந்தா முன்னாடி வாடா”

“ஏன் பின்னாடி வந்தா ஆகாதா உனக்கு..மூலமா”ராசு கௌவுண்டர் கொடுக்க ஊரிலுள்ள இளவட்டங்கள் எல்லாம் கொல்லென்ன சிரிக்க தில்லை நாயகம் நடராஜருக்கு இகுவளாக ஆடிகொண்டிருந்தார்.டுப்பு டுப்பு புல்லட்டில் புகை அடைக்க வந்து சேர்ந்தார் ராசுவின் தகப்பன் நாட்டாமை.

“எய்யா நீரா என்னாப்பு இப்டி ஒரு காரியத்த பண்ணிப்புட்ட..விஷயத்த கேள்வி பட்டுத்துல இருந்து மனசு கெடந்து அடிச்சிகிச்சு.. என்னதான் உன்ற அப்பன் உன்ன பெத்துருந்தாலும் உனக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுத்து வளத்தது ஆரு.. நா தானே..”

மீண்டும் கையை வாயாருக்கே வைத்துக்கொண்டு” அதான் உன்னிய மாறியே வெளங்கமா போயி நிக்குறான்”மகன் குரலை கேட்டு கூட்டத்தை பார்த்து கொண்டே

“என்னடா நாம வளத்த புள்ள இப்டி ஒரு காரியத்த பண்ணி புட்டுச்சேன்னு நெனைக்கயில நாண்டுக்கிட்டு தொங்கிரலாம்னு நெனச்சேன்.. ஆனாலும் ஊரு சனம் சொன்னத நா நம்பல்லப்பு..என்ற நீரன் அப்டி பண்ணிருக்க மாட்டானு அடிச்சு சொன்னேன். ஆனா என்ற வாக்க என்ற வளப்ப சந்தி சிரிக்க வெச்சிபுட்டியே”

“சந்தி எல்லாம் சிரிக்கல.. கணக்கு வாத்தியாரு மவ சந்தியாதான் உன்ற வேட்டி பின்னால கிழிஞ்சிருக்குறத பாத்து சிரிக்குது..உள்ளாரா மஞ்ச கலருல பட்டா பட்டி பல்ல காட்டுது அத மறைய்யா மொத”ஊரே கெக்க பெக்கவென சிரிக்க நாட்டாமை மகனை பிடித்து இரண்டு கும்மு கும்மி நீரன் அருகே தள்ளி விட்டார்.நீரனுக்கும் சிரிப்பு தான் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.தில்லை நடராஜர் ரேஞ்சிர்கு ஆடி மூச்சு வாங்கி ஊரே தன்னை பார்த்து கெக்கலி கொட்டி சிரிப்பதை கண்டு கடுப்பாகி காண்டாகி கண்டாமிருகமாகி சொனப்பே இல்லாத அருவாள் ஒன்றை எடுத்து கொண்டு நீரனை நோக்கி ஓடினார்..

அதுவரை சிரித்து கொண்டிருந்த ஊரு சனம் அனைவரும் அதிர்ந்து போய் ஒரு சம்பவத்தை பார்க்க பீதியோடு நிற்க அருவாள் நீரனை நோக்கி நீளும் போதே அவனை மறைத்து கொண்டு ராசு நின்றான்.. அவனுக்கும் முன்னால் தன் தந்தை ஓங்கிய அருவாளை இடது கையால் பிடித்தபடி நின்றாள் செந்தூரா.கண்களில் கண்ணீர் கோடுகள் காய்ந்து கோப ரேகைகள் வேர்விட பெற்ற தகப்பனை முறைத்து கொண்டு நின்றாள்.கூர்மையில்லாத அருவாள் ஆனாலும் அவள் உள்ளங்கையை சிவப்பாக்கி கொண்டிருந்தது.தில்லை கை நடுங்க அருவாளை கீழே போட்டு விட்டு அவரது தோளில் கிடந்த துண்டை எடுத்து செந்தூராவின் கையை துடைத்து கொண்டே

“ஏங் கண்ணு இப்டி செஞ்சிப்புட்ட..அந்த நாசமா போறவனுக்காக உன்ற கைய புண்ணாக்கி கிட்டு ஐயோ எம்புட்டு ரத்தம்.. ஏலே குகா வண்டிய அடிச்சு ஓட்றா..வா கண்ணு ஆஸ்பத்திரிக்கு போவலாம்”அவரின் கண்கள் கலங்கி கை நடுங்க மகளின் கை காயத்துக்கு தன் கண்ணீரை டெட்டோலாக்கி கழுவி கொண்டிருந்தார்.

“என்னயா நடக்குது இங்க.. ஆளாக்கு வெட்டுவேன் குத்துவேன்னு துடிச்சுகிட்டு இருக்கீங்க.. அப்ப நாட்டாமைனு நா என்ன சொம்படிக்கவா இங்க இருக்கேன்.. ஏலே யார்ல அங்க கூட்டுங்கடா பஞ்சாயத்த”

“நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு”வேறு யாரும் இல்லை நம்ம ராசு தான். அவனை தன் தோளில் கிடந்த துண்டால் அடித்து

“சனியன் சனியன் எப்டி வாழபழமா பொறந்துருக்கு பாரு எனக்குன்னு.. இந்த தறுதல நாய பெக்க மண் சோறு தின்னுட்டு அலைஞ்சா இவன் ஆத்தா.. இது பொறக்காமயே இருந்துருக்கலாம். த்து”

“என்ன டேடி என்ற மேல ரொம்ப நேரமா தூசி தட்டுற.. நா இன்னைக்கு அதிசயமா குளிச்சிட்டேன் சோ நாளைக்கு தூசி தட்டு..”அவனை ஓரமாய் வெச்சு நாட்டாமை மொத்த ஆக மொத்தம் பஞ்சாயத்து நாறி போச்சு ஸாரி மாறி போச்சு.

“டேடி மொத கண்ண தொடைங்க.. நா சொல்றத கம்முனு கேளுங்க”அந்த ஊரின் முடிசூடா மன்னனாகிய அவர் மகளின் ஒற்றை வார்த்தையில் கண்ணீரை துடைத்து கொண்டு மகள் கூறவரும் விஷயத்தை கேட்க தயாராகி நின்றார்.செந்தூரா ப்ளௌஸ் உள்ளே உறங்கி கொண்டிருந்த பொன் தாலியை வெளியே எடுத்து போட்டு

“நானும் நீரனும் கல்யாணம் பண்ணிகிட்டோம்.. அவன் என்ன கடத்திட்டு போனான்.. மத்தபடி தப்பா ஒன்னும் நடக்கல. என் மேல உள்ள ஆசையில இப்டி பண்ணிட்டான்.என்ன யாரும் வற்புறுத்தல.நானா தா அவன கட்டிகிட்டேன்.. எங்கள மன்னிச்சு ஏத்துக்கோங்க டேடி”அவள் பேசி முடிக்க பளார் என்ற தில்லை விட்ட அறையில் தள்ளாடி நின்றவளை தாங்கி பிடித்தான் நீரன்.

“மானங்கெட்ட கழுத.. இப்டி ஓடி போயி கண்ணாலம் பண்ணவா நேத்திக்கு அவன சுட்டு அவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ண. நல்லபடியா அவனயே கட்டி வைக்க தானே நம்ம தகுதிக்கும் தராதாரத்துக்கும் கிட்ட கூட வர முடியாத சல்லிப்பயல நீ சொன்னேன்னு ஒரே காரணத்துக்காக உனக்கு பேசி முடிச்சேன். ஆனா நீ இந்த ஈன பய கூட கூட்டு சேந்துகிட்டு என்ன ஊரே சிரிக்க வெச்சிபுட்ட.பொட்ட புள்ளைய அடக்கி வளன்னு எல்லோரும் சொல்லுறப்போ என்ற மவ தங்கம்னு மார் தட்டிட்டு அலைஞ்சேன்.அதுக்கு நல்ல கைமாறு பண்ணிப்புட்ட கண்ணு.. நல்லா இரு அவன் கூட நல்லா இரு.. என்ற வூட்டு பக்குட்டு மட்டும் வந்துறாத சொல்லிட்டேன்”

“நீரு சொன்னாலும் இல்லனாலும் நாங்க நல்லாத்தான் இருப்போம். எங்களுக்கு என்ன வூடா இல்ல ஒம்ம வூட்டுக்கு வந்து பிச்ச எடுக்க..அப்பன் பாசத்துல என்ற பொஞ்சாதி ஒம்ம வூட்டுக்கு வந்தாலும் வருவாளே தவுற ஒதவி கிதவினு என்னிக்குமே ஒன்ற வூட்டு வாசபடிய மிதிக்க மாட்டா..ஒம்ம விட ஒம்ம மவள மகாராணியா வாழ வைக்குறேன் பாக்க தான போறீரு”நீரன் பேசிய பேச்சை கேட்டு தளர்ந்த நடையுடன் மகளை கண்களில் நிறைத்து கொண்டு அங்கிருந்து சென்றார் தில்லை.குகனும் ஒன்றும் சொல்லாமல் மாமனை தொடர்ந்து சென்றார்.ஊரும் இன்றைய என்டெர்டெய்மென்ட் முடிந்து விட்ட மகிழ்ச்சியில் சொந்த வேலையை பார்க்க செல்ல நாட்டாமை வூட்டுக்கு வா உன்ன வெச்சிக்குறேன் என்று அங்கிருந்து சென்றார்.

ஆரத்தி எடுக்க ஒரு ஈ காக்கா இல்லாமல் இருவரும் வெளியே நிற்க ராசு நீரன் வீட்டிற்குள் சென்று மஞ்சலும் சுண்ணாம்பும் கலந்து ஆரத்தி தயார் செய்து எடுத்து வந்தவன் எதிர் வீட்டில் ஓர் ஓரமாய் தன்னை மறைத்து நின்ற காஞ்சனாவை பார்த்து”யெக்கா இங்க வாயேன்..”

“இல்லய்யா நா அங்க வரக்கூடாது.. புள்ளைங்க இப்பதா கண்ணாலம் முடிச்சு வந்துருக்குங்க..”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல இங்க வா”காஞ்சனா வர மாட்டேன் என்று மறுக்க நீரன் அவர் கை பிடித்தே இழுத்து வர ராசு அவர் கரங்களில் ஆரத்தி தட்டை கொடுத்தான். நடுங்கும் விரல்களில் ஆரத்தி எடுத்தவரை பார்த்து

“நா பசியில செத்துராம என்ன பாத்துகிட்ட நீ என்னிக்குமே எனக்கு அம்மா தான்.. நீ ஆரத்தி எடுத்து ஆரம்பிச்ச எங்க வாழ்க்க எப்டி செம்மயா இருக்க போது பாரு”காஞ்சனா கண்கலங்க அவனை பார்க்க இருவரும் உள்ளே சென்றனர்.நேராக பூஜை அறைக்கு வந்து நின்றவன் செந்தூராவை பார்க்க அவன் பார்வைக்கு அங்கிருந்த விளக்கை ஏற்றி ஒரு கும்பிடு போட்டவள் நீரனின் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.

“மாமா என்னங் நீங்க.. நம்ம புள்ளைய போய் கை நீட்டி அடிச்சு வாய்க்கு வந்த மாறி பேசி புட்டீரே”மனம் பொறுக்கவில்லை குகனுக்கு.ஊஞ்சளில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த தில்லை

“குகா என்ற மவ சொன்ன செய்திய தான் நா செஞ்சு முடிச்சேன்.அவ கண்டிப்பா போன் போடுவா அப்ப தான் முழு கதையும் நமக்கு தெரியும்.. என்ற மவ சொல்லட்டும் அந்த நீரன உருத் தெரியாம அழிச்சி புடுறேன்”காயப்பட்ட கையை தகப்பன் துடைத்து கொண்டிருக்கும் போதே மெல்லிய குரலில் தந்தை மட்டும் கேட்க்கும் படி அவளை அடித்து ஊர் பார்க்க ஒதுக்கி வைக்க சொல்லியவள் பிறகு அழைப்பதாக கூற மகள் சொல்லியதை அச்சு பிசக்காமல் செய்து முடித்திருந்தார் தில்லை.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்